தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்  முடிவுக்கு வரும் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆகஸ்ட்-3ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து பள்ளிகள் இயங்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் பரவிய நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது,  இதனையடுத்து தொடர் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருவதால். பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து என அனைத்தும் முற்றிலுமாக முடிங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிக்கூடங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பெற்றோருகளின் நீண்ட கோரிக்கைகளுக்குப் பின்னர் மாணவர்களுக்கான தேர்வுகள்  ரத்து செய்யப்பட்டதுடன், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அவைகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், அரசு பள்ளிகளில் ஆகஸ்ட்-3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும், அதாவது 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததாக தகவல்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. ஆனால் இது தொடர்பாக எந்தவிதமான உறுதியான  தகவலும் வரவில்லை, அந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-  பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது, இந்த பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும், அதேபோல் மாணவ மாணவியர்களுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும், வீட்டிலிருந்தபடியே அவர்கள் படிக்க இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என அவர் கூறினார். அதேபோல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் முழுவதுமாக ஒழிக்கப்படும் வரை தமிழகத்தில் பள்ளிகளை திறக்கும் எண்ணமில்லை, அடுத்த மாதம் அல்லது அக்டோபர் மாதம் பள்ளிகளை திறப்பது குறித்து  ஆலோசனைகள் வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும் கடிதம் எழுதி உள்ளது,  தமிழகத்தின் நிலையை பொறுத்தே  இதில் முடிவெடுக்கப்படும், கொரோனா பாதிப்புகள் ஓயும்வரை  பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா பிரச்சனை சரியான பின்னரே அது குறித்து முடிவு எடுக்கப்படும், உரிய நேரத்தில் முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்வோம் என அவர் கூறியுள்ளார்.