முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கந்த சஷ்டியை இழிவு படுத்திய கருப்பர் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், ‘’முருகனை விமர்சிக்கும் அந்நபருக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கோரி வாக்கு அரசியலுக்காக ஆரியமயமாக்கல் குறித்து திமுக வாய்திறக்க மறுத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம்; ஆரியத்திடம் சரணாகதி அடையும் திராவிடத்தின் வழமையான பிழைப்புவாதமென்றால், மிகையில்லை.

வீரத்தமிழர் முன்னணி வாயிலாக மகத்தான இந்த வரலாற்றுப் பணியை நாங்கள் செய்ய தொடங்கியபோது கேலிசெய்து பிற்போக்கென கட்டமைக்க முயன்ற திராவிடக்கூட்டம், இன்றைக்கு தமிழ்க்கடவுள் முருகனை ஆரியத்திடமிருந்து மீட்க வேண்டுமெனக்கோரி, திடீர் கூக்குரலிட்டு கிளம்புவது நகைப்பையே தருகிறது. 

நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி எனும் படைப்பிரிவை உருவாக்கி, தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய மயமாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை மீட்டு தமிழ் மயப்படுத்தும் பணிகளை சட்டத்தின் வாயிலாகவும், போராட்டங்களின் வாயிலாகவும், பரப்புரைகளின் வாயிலாகவும் நாளும் செய்துகொண்டிருக்கிறது.

 

இத்தகைய இழிவானப் பரப்புரை மூலம் தமிழர் மெய்யியல் மீட்சிக்கான எங்களது சமரை ஆரிய – திராவிட அடிவருடிகள் தங்களது மோதலாய் காட்டி அரசியல் இலக்காக மடைமாற்றி தமிழ்ச்சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முயல்வது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற இழிசெயல்களால் உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முத்தமிழ் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் ஒருபோதும் குன்றிவிடாது எனவும், தமிழர்களின் ஆதி சமயங்களையும், வழிபாட்டு முறைமைகளையும், தொல்லிய இறைகளையும் மீட்டெடுத்து மெய்யியல் மீட்சியை வீரத்தமிழர் முன்னணி சாத்தியப்படுத்திக் காட்டும் எனவும் இதன் மூலம் பேரறிவிப்பு செய்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.