கோடநாடு எஸ்டேட்டில் நடந்த, கொலை, கொள்ளை சம்பவத்தில், ஜாமீன் ரத்து செய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரும் கேரளாவில் கைத்து செய்யப்பட்டனர். 

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவ்வப்போது தங்கிய, நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில், காவலாளியை கொலை செய்து, கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. அதன் பின்னணியில், தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி, 'தெஹல்கா' முன்னாள் ஆசிரியர், மாத்யூ சாமுவேல், ஆவணப்படம் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, முதல்வரை அவதுாறு செய்வதாக அளித்த புகாரில், மாத்யூ சாமுவேல் மற்றும் கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, சயன், மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில், மாத்யூ சாமுவேல், மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், சயன், மனோஜுக்கு வழங்கப்பட்ட ஜாமினை, நீலகிரி நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், இருவரும் மனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை, வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சயன் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்ய பிடிவாரண்ட் போடப்பட்டது. இதனை தொடர்ந்துகேரளாவில் சயன் மனோஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று மாலை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.