Asianet News TamilAsianet News Tamil

மழை, வெள்ளத்தில் இருந்து மக்கள காப்பாத்துங்க… அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்த ஓபிஎஸ்-இபிஎஸ்!!

மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

save the people said ops and eps
Author
Tamil Nadu, First Published Nov 7, 2021, 6:12 PM IST

மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுக்குறித்த அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழையின் தொடக்க நிலையிலேயே சென்னை மாநகர வீதிகளில் ஆறு போல் தண்ணீர் ஓடுவதையும், சென்னை நகரே குளம் போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதையும், இதனால் ஏழை , எளிய, நடுத்தர மக்களின் இருப்பிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து அவர்கள் அல்லல்படுவதை பார்க்கும்போதும் மிகுந்த மனவேதனையும், துயரமும் ஏற்படுகின்றன. அண்மைக் காலத்தில் நமது அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை பார்த்த பிறகேனும் உரிய முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் . வருமுன் காக்கும் வழிகளில் கவனம் செலுத்தியிருந்தால் தலைநகராம் சென்னையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இவ்வளவு விரைவில் இத்தகைய பெரிய பாதிப்பை சந்தித்திருக்கமாட்டா. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக கழக அரசு மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற மேற்கொண்ட நடவடிக்கைகளை இப்போதைய ஆட்சியாளர்கள் முன் மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகர உழைக்கும் மக்களுக்கு, அம்மா உணவகங்கள் வழியாக உணவுகள் வழங்கப்பட்டன. அம்மா உணவகப் பணியாளர்களுக்கு வேலைக்கு வந்து செல்ல வசதியும் செய்து தரப்பட்டது. இப்போது அம்மா உணவகப் பணியாளர்களின் தினசரி ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன . உழைக்கும் மக்களுக்கு உணவளிக்க ஓடோடி பாடுபடும் எளிய பெண்களின் வயிற்றிலடிக்காமல் அவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்வழிகளில் வெள்ளநீர் பெருமளவில் வரும் வாய்ப்பு இருப்பதால் அவற்றின் கரையோரப் பகுதிகளிலும் , தண்ணீர் தேங்கியுள்ள மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவு, முகக்கவசம், மற்ற மருத்துவ வசதிகளை வழங்க தமிழ் நாடு அரசு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை துரிதப்படுத்த வேண்டும்.

save the people said ops and eps

சென்னையின் பெரும்பாலான கரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நின்று போயிருக்கிறது. கழக ஆட்சியின்போது சுரங்கப்பாதை தண்ணீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் பம்ப்களை பயன்படுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நீர்வெளியேற்றம் நடைபெற்றதை நினைவூட்டுகிறோம். சாலையோர மரங்கள் கண்காணிக்கப்பட்டு திடீரென மரங்கள் சாயதவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . தலைமைச் செயலகத்திலேயே மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டது போல இன்றுமொரு துயரம் எங்கும் நடைபெற்றுவிடக் கூடாது. மழைக் காலங்களில் மின்கசிவு ஏற்பட்டுவிடாதபடி மக்களை பாதுகாக்க மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடியாக முன்னேற்பாடுகளைச் செய்திட வேண்டும் .

save the people said ops and eps

மின் கம்பிகள் அறந்து விழாத வகையிலும், மின் கம்பங்கள் சாய்ந்துவிடாதபடியும் தற்காப்பு நடவடிக்கைகளை மின் வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பருவ மழைகளை மிகத் துல்லியமாக கணக்கிடும் வகையில் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில், விரைந்து எடுக்க மத்திய அரசின் துறைகள் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தன. தமிழ் நாடு முதலமைச்சரும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இதுபற்றி விவாதித்ததாக ஊடகங்களில் செய்தி வந்தது. ஆயினும் இப்பொழுது சென்னைக்கும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலையைப் பார்த்தால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டனவோ என்ற அச்சமும், ஐயப்பாடும் எழுகின்றன. ஓரிரு நாள் மழைக்கே இப்படி என்றால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ? என்ற கவலை அனைவர் நெஞ்சிலும் ஏற்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios