தனது மக்கள் மன்றத்தில் மீண்டும் சத்யநாராயணாவுக்கு உயர் பொறுப்பு வழங்க ரஜினி முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பு தளங்களில் ரஜினிக்கு உதவியாக இருந்தவர் சத்யநாராயணா. ரஜினிக்கு சிகரெட் பற்ற வைத்துக் கொடுப்பது முதல் கார் ஓட்டியது வரை சத்யநாராயணா பார்க்காத வேலையே இல்லை என்று கூறலாம். ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்கள் கிடுகிடுவென அமைக்கப்பட்ட நேரத்தில் தனக்கு நம்பகமான ஒருவர் தலைவராக இருக்க வேண்டும் என்று ரஜினி கருதிய போது தான் தனது உதவியாளரான சத்யநாராயணாவை ரசிகர் மன்ற தலைவராக நியமித்தார்.

25 ஆண்டுகளுக்கு மேலாக சத்யநாராயணா ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தார். தற்போது ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்டச் செயலாளர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க கூடிய 90 சதவீதத்தினர் சத்யநாராயணாவால் நியமிக்கப்பட்டவர்கள். ரஜினிஆக்டிவாக இல்லாத சமயத்தில் கூட மாவட்டம் மாவட்டமாக சுற்றி ரசிகர் மன்றங்களை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் சத்யநாராயணா என்கிற ஒரு பெயரும் உண்டு. 1996 தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட பழக்கம் தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். அந்த தேர்தலுக்கு பிறகு ரஜினி பெரும்பாலும் தேர்தல் நேரங்களில் சைலன்ட் ஆகிவிடுவார். 

ஆனால் தனது ரசிகர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்துவிடுவார். இந்த சமயங்களில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சத்யநாராயணா உதவியோடு ரஜினி ரசிகர்களை தேர்தலுக்கு பயன்படுத்தி வந்து உள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம்புழங்க ஆரம்பித்ததாக கூறப்பட்டது. இதனால் சத்யநாராயணாவை ரஜினி தனது ரசிகர் மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இருந்தாலும் கூட ரஜினி வீட்டில் சத்யநாராயணாவை தினந்தோறும் பார்க்க முடியும். இதே போல் ராகவேந்திரா மண்டபத்திற்கும் தவறாமல் சத்யநாராயணா வந்து சென்றுவிடுவார். ரஜினி கட்சி அறிவித்த பிறகு ரசிகர் மன்றத்திற்கு பொறுப்பாளராக தனது நண்பர் சுதாகரை நியமித்து அதிகாரம் கொடுத்தார். 

பிறகு லைக்கா நிறுவனத்தில் இருந்து ராஜூ மகாலிங்கத்தை அழைத்து வந்தார். ஒரு கட்டத்தில் இளவரசன் என்பவரை ரசிகர் மன்றத்தின் மாநில அமைப்பாளராக நியமித்தார். இப்படி நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டு அதிகாரம் கைமாறினாலும் கூட ரசிகர்களை நிர்வகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்களை நொடிப் பொழுதில் இளவரசன் காலி செய்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 ரசிகர் மன்ற பெண் நிர்வாகிகளையும் ஒருமையில் பேசியதாக இளவரசன் மீது புகார் கூறப்பட்டது. கட்சி  ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் இனி ரசிகர் மன்றம் தொடர்பாக எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று ரஜினி விரும்புகிறார். அப்படி என்றால் தனது ரசிகர் மன்றத்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து அனுபவம் பெற்ற சத்யநாராயணாவை அழைப்பதை தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கும் அவர் வந்துள்ளார்.

 

தற்போதும் கூட ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது வரும் புகார்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவில் சத்யநாராயணாவுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் சத்யநாராயணாகவுக்கு மிகப்பெரிய பதவி கொடுக்கப்பட்டு கட்சிப் பணிகளை தீவிரப்படுத்த ரஜினி ஆர்வம் காட்டி வருகிறார். இந்த தகவல் லீக் ஆனதில் இருந்தே ரசிகர் மன்றத்தினர் மகிழ்ச்சியில் திக்குமுக்காட ஆரம்பித்துள்ளனர்.