ஜெயலலிதாவை இயக்கியதே சசிகலா தான்’... அமமுகவிற்கு தாவியதும் அந்தர் பல்டி அடித்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்!
சசிகலாவை பேச யாருக்கும் உரிமை இல்லை. தினகரனை சந்தித்து எத்தனை பேர் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி வாங்கியுள்ளார்கள் என்பது எனக்கு தெரியும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 171 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேர் போட்டியிட உள்ள முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் 3 சீனியர் அமைச்சர்கள், 41 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டது அதிமுகவில் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட சாத்தூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை, ரவிச்சந்திரன் அறிவிக்கப்பட்டார். அவர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர் என்று ராஜவர்மன் குற்றம்சாட்டினார். “தொகுதியில் எனக்கு நல்லபெயரும், மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. அதனால் எனது வளர்ச்சி பிடிக்காமல்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னைப்பற்றி தவறான தகவல்களை தலைமையிடம் சொல்லி எனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்துள்ளார்” பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று அமமுக அலுவலகத்தில் டி.டி.வி.தினகரனை சந்தித்த ராஜவர்மன் அக்கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜவர்மன், தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை தேர்தலில் சாத்தூர் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். 30 அமைச்சர்கள், 139 பேர் எம்.எல்,.ஏ.ஆவதற்காகவும் அதிமுக கட்சியை அடமானம் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
சசிகலாவை பேச யாருக்கும் உரிமை இல்லை. தினகரனை சந்தித்து எத்தனை பேர் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி வாங்கியுள்ளார்கள் என்பது எனக்கு தெரியும். புரட்சி தலைவி ஜெயலலிதா உற்சவர், சசிகலா மூலவர். 38 ஆண்டுகளாக ஜெயலலிதாவையும், அதிமுக இயக்கத்தையும் இயக்கியவர் சசிகலா தான். தேர்தலில் அதிமுக தோல்வியடைய சசிகலா தான் காரணம் என பழி போடுவார்கள் என்பதால் தான் அவர் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். தேர்தலுக்குப் பிறகு அதிமுக தொண்டர்களே சசிகலாவை அழைத்து வருவார்கள் என கூறியுள்ளார்.