தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. முதல் கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட  தடை விதிக்கக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது. சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்கள்  பல கட்டங்களாக நடந்தாலும், ஒரே நேரத்தில்தான் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். தேர்தலில் சமவாய்ப்பு என்ற நோக்கத்துக்கு இது மாறாக இருக்கும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 30 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.