ராணுவத்துக்கு பயப்படவில்லை என்றால், ஐடி ரெய்டுக்கு பயப்பாடுவார் என்று தனக்கு தமிழிசை விடுத்த எச்சரிக்கைக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவருகிறது.

திரைத்துறையினர் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் மௌன போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் இறுதியில் பேசிய சத்யராஜ், தமிழகத்தின் உரிமையை மறுக்காதீர்கள். மறுத்தால் போராட்டம் நடத்துவோம். ராணுவத்துக்கும் அஞ்சமாட்டோம் என சத்யராஜ் ஆக்ரோஷமாக பேசினார்.

சத்யராஜின் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ராணுவத்துக்குத்தானே பயப்படமாட்டார்கள். ஆனால் ஐடி ரெய்டுக்கு பயப்பாடுவார்கள் என தெரிவித்திருந்தார்.

தமிழிசையின் எச்சரிக்கைக்கு சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் ஐபிஎல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா தலைமையில், சத்யராஜ், செல்வமணி, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர்பச்சன், கௌதமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சத்யராஜ், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என வலியுறுத்தினார். மேலும், தமிழிசைக்கு பதிலளித்த சத்யராஜ், 40 வருடங்களாக சினிமாவில் நடித்துவரும் நான், நேர்மையாக வரி கட்டியுள்ளேன். அதனால், வருமான வரி சோதனைக்கு நான் பயப்படவில்லை. என்னிடம் அவ்வளவு சொத்துக்களும் இல்லை. எனது குரலுக்கு பதிலளிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆளாகிவிட்டேனா? என்னை பார்த்து பயப்படாதீர்கள். அரசியல் கனவு எனக்கு கிடையாது. அரசியல் தொடர்பான எந்த கனவும் கிடையாது. 

ஆனால் தமிழர்களின் பிரச்னைக்காக குரல் கொடுத்து கொண்டேயிருப்பேன் என சத்யராஜ் தெரிவித்தார்.