சட்டமன்ற தேர்தலை போர் என்று வர்ணித்த ரஜினி அதனை எதிர்கொள்வதற்காக தனது பழையை தளபதியை தயாராகும்படி உத்தரவிட்டுள்ளது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநில தலைவராக இருந்தவர் சத்தியநாராயணன். கடந்த 2010ம் வருடத்திற்கு முன்பு வரை ரசிகர் மன்றம் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் இவரிடமே இருந்தது. பிறகு சத்தியநாராயணனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனை அடுத்தே ரஜினியின் நண்பர் சுதாகர் ரசிகர் மன்ற நிர்வாகி ஆனார். அதே சமயம் சத்தியநாராயணன் ரஜினியை விட்டு விலகாமல் தொடர்ந்து அவருடனேயே இருந்தார். ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் சத்தியநாராயணனுக்கு முக்கிய கட்சிகள் சில வலை விரித்தன.

ஆனால் சாகும் வரை ரஜினி தான் என்று உறுதியாக இருந்த சத்தியாநாராயணன் எந்த கட்சியிலும் சென்று சேரவில்லை. லதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சில நிர்வாகிகளின் புகார்களால் ரஜினி மன்ற செயல்பாடுகளில் இருந்து சத்தியநாராயணாவை ஒதுக்கியே வைத்திருந்தார். ஆனால் மன்றத்தின் பழைய நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அவருடன் தொடர்பில் தான் இருந்தனர். இதற்கு காரணம் சத்தியநாராயணனாவின் செயல்பாடுகள் தான் என்கிறார்கள். 1996 முதல் 2004 வரை ரசிகர் மன்றத்தை திமுக, அதிமுகவிற்கு நிகரான ஒரு இயக்கமாக சத்தியநாராயணா வைத்திருந்ததாக சொல்கிறார்கள்.

அதன் பிறகு தான் ரஜினி ஆன்மீகம், சினிமா என்று தீவிரமான நிலையில் மன்ற செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பிறகு மன்ற செயல்பாடுகளில் இருந்து சத்தியநாராயணா ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது தான் அவருக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது எனலாம். மன்ற செயல்பாடுகளில் ஒதுங்கியிருந்தாலும் ரஜினி தனது குடும்ப விழாக்கள், சினிமா விழாக்களில் தவறாமல் சத்தியநாராயணாவை கலந்து கொள்ள அழைத்துவிடுவார். இந்த நிலையில் கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்களை அழைத்து ரஜினி பேசிய போது சத்தியநாராயணா அங்கு இல்லை.

இதனால் ரஜினி ஆரம்பிக்கும் புதிய கட்சியில் அவருக்கு நிச்சயம் பொறுப்புகள் இருக்காது என்றே பேச்சுகள் அடிபட்டன. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த வெள்ளியன்று ரஜினி வீட்டில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையில் சத்தியநாராயணா கலந்து கொண்டார். ரஜினியே சத்தியநாராயணாவுக்கு போன் போட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டு போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார் சத்தியநாராயணா.

சத்தியநாராயணாவை ரஜினியின் போர்ப்படை தளபதி என்பார்கள். கடந்த 1996 முதல் 2004 வரையிலான ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டமைத்தவர் அவர் தான். ரஜினிக்கு பக்கபலமாக ரசிகர்களை திரட்டியது போன்ற செயல்களில் சத்தியின் பங்கு மகத்தானது. அதோடு மட்டும் அல்லாமல் வெறும் மாவட்ட நிர்வாகிகள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கிளை மன்ற நிர்வாகிகள் வரை சத்திக்கு நெருக்கம் உண்டு. மேலும் எந்தெந்த மாவட்டத்தில் ரஜினிக்கு எவ்வளவு ரசிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்கிற தகவலும் அவருக்கு விரல் நுனியில் உள்ளது.

தற்போது உடல் நிலையில் பாதிப்பு இருப்பதால் சத்தியால் முன்பு போல் செயல்பட முடியவில்லை என்றாலும் கூட ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் செயல்படும் நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகள் போன்றவை குறித்து ரஜினி முடிவெடுக்க சத்தி மிகப்பெரிய அளவில் உதவுவார் என்கிறார்கள். தவிர தமிழகத்தின் பூகோள அமைப்பையும் துல்லியமாக அறிந்தவர் சத்தி. இதனால் ரஜினிக்கான பிரச்சார வியூகத்தை வகுப்பதிலும் அவரது பங்கு அதிகம் இருக்கும் என்கிறார்கள். ரஜினியின் போர்ப்படை தளபதி என்று அழைக்கப்பட்ட சத்தி போர் நெருங்கியுள்ள சூழலில் ரஜினியால் சேர்க்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது.