தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்தனர். இந்த சூழலில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தானாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணை நடத்தியது. அதில் போலீசார் கஸ்டடியில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் இரவு முழுவதும் சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.
 இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், போலீசாரிடம் மாறி மாறி விசாரணை நடத்தி வந்தனர். அதற்குள் கைதான போலீசார், விசாரணைக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் என மாறி மாறி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றுக்கு பலியாகிவிட்டார். கடந்த 24ஆம் தேதி பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இவருக்கு வயது 56. இந்த செய்தி சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காவலர் முத்துராஜ், தலைமை காவலர் முருகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.