டிடிவி தினகரனின் அமமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிரேகா. இவர், அக்கட்சியின் மாநில தகவல்தொழில்நுட்ப பிரிவின் இணை செயலாளராகவும் இருந்து வந்தார். மேலும் ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். டிடிவி தினகரன் சார்பாக, டிவி விவாதங்களில் பங்கேற்று சசிரேகா பங்கேற்று பேசி வந்தார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அமமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி  திடீரென அதிமுகவில் சேர்ந்தார். இவருடன், இவரது கணவர் அன்பு, மற்றும் பல ஆதரவாளர்களும் அதிமுக.,வில் சேர்ந்தனர். 

இந்நிலையில், அதிமுகவில் சேர்ந்த ஒரே நாளில், அதாவது அவர் இணைந்த மறுநாள் சசிரேகாவுக்கு, செய்தித்தொடர்பாளர் பதவி தரப்பட்டுள்ளது. இது அதிமுக முன்னணி தலைவர்களை பெரும் வியப்படைய செய்துள்ளது. ஒரே நாளில்  ஒருவருக்கு பதவியா என்று பேச்சுகள் அடிபடத் தொடங்கியுள்ளன.

அதேசமயம், அமமுகவின் வழக்குகள், சமூக வலைதள பிரிவு உள்பட பல விசயங்களை நிர்வகித்து வந்த சசிரேகாவும், அவரது கணவர் வழக்கறிஞர் அன்புவும் கூண்டோடு கம்பி நீட்டியதால் , டிடிவி தினகரனை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.