செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச்செயலர் பதவியில் இருந்தும், அ.தி.மு.க.,வில் இருந்தும், சசிகலா நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவை அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. ஆனால் சசிகலா முதலமைச்சராக முயன்றபோது, அக்கட்சி இரண்டாக உடைந்தது.

இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டாக பிரிந்திருந்த அதிமுக சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இணைந்தன.

அப்போது பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதற்கான முயற்சியில் ஓபிஎஸ் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழுவை கூட்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு திட்டமிட்டு உள்ளது. அதில் பங்கேற்கும்படி, 3,200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட உள்ளது.

ஏற்கனவே நடந்த பொதுக்குழுவில், தற்காலிக பொதுச்செயலராக, சசிகலாவை தேர்வு செய்த தீர்மானத்தை ரத்து செய்ய, இந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படுகிறது. மேலும் ஒருமனதாக, புதிய பொதுச்செயலர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், பிளவுபட்ட, அ.தி.மு.க.,வில், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தீபா என, மூன்று தரப்பினரும் மனு கொடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக பிரமாண பத்திரங்களையும், தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்து உள்ளனர். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு வழக்கு தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில், இரட்டை இலை சின்னம் கேட்டு, ஏற்கனவே வழங்கிய மனுவை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்  அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழு சார்பில், பொதுக்குழுவை கூட்டி, புதிய பொதுச்செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு அனுமதி கேட்டும், இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியும், தேர்தல் கமிஷனில், விரைவில்  மனு அளிக்கப்படவுள்ளது.