Sasikalas assets to be seized - jiramakirusnan idea

தமிழகத்தில் நிலவும் வறுமையை போக்க சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் யோசனை தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அவர்களுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூன்று பேருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

வர்தா புயல் மற்றும் வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நிவாரண நிதியும் ஒதுக்கவில்லை. தமிழக அரசு மட்டுமே 2400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

அதிலும் 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு வறட்சி நிவாரணம் இல்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில், முறையாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

அதிமுக திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் தான். ஊழலை ஒழிக்க லோக் ஆயுத்தா சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.