சசிகலா வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

தஞ்சை அருகே மடிகை மூர்த்தியாம் பாள்புரம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உணவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேட்டியளிக்கையில்;- விவசாயிகளின் தேவைக்கேற்ப நகைக்கடன்கள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் தவறான தகவல். சில வங்கிகளில் அதற்கான ஒதுக்கீடு முடிந்திருக்கும் மற்றபடி அனைத்து கூட்டுறவு வங்கி விவசாய நகை கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்த அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. கட்சியின் பொதுக்குழு, செயற்குழு எடுத்த முடிவின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கட்சியும் ஆட்சியும் செம்மையாக கொண்டு செல்கிறார்கள்.

இதில் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இரண்டாவது கருத்தே கிடையாது. கீழிருந்து மேல் வரை நாங்கள் செம்மையாக சென்றுக் கொண்டிருக்கிறோம். இரண்டாவது கருத்துக்கு இடமே கிடையாது. சசிகலா வெளியே வருவார் என்ற தகவல் பொய்யானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ஆட்சி மாற்றம் ஏற்படும் என எத்தனையோ பேர் எதிர்பார்த்தனர். ஆனால், யாராலும் இந்த ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றார்.