தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என எல்.முருகன் கூறிய நிலையில், அவரை நீக்க வேண்டியிருக்கும் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2500 ரூபாய் பொங்கல் பரிசாக அளித்த தமிழக முதல்வர் பாராட்டுதகுக்குரியவர். சிறப்பாக செயல்படும் அரசு தொடர்ந்து நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறது. அக்டோபர் மாதம் எங்கள் தலைமை முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

ஆனால், பாஜக தலைவர் முருகன் ஏன் முதல்வர் வேட்பாளரை  தேசிய ஜனநாய கூட்டணி அறிவிக்கும் என கூறுகிறார் என புரியவில்லை. கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் முருகன் பேசினால் பாஜக தலைமையே இவரை நீக்க வேண்டியிருக்கும். முதல்வர் சிறப்பாக செயல்படுவதாக பிரதமரே பாராட்டிய நிலையில் முருகனின் கருத்து மோடிக்கு எதிராக உள்ளது. 

மேலும், சசிகலா வெளியே வந்த பின்பு டிடிவி தினகரன் தலைமையை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது உறுதி என்றார். அவர் அபராத தொகையை செலுத்திவிட்டார். அடுத்த மாதம் வெளியில் வருகிறார். வந்த பின்னர் அவரின் அரசியல் நிலை குறித்து அவர் தான் முடிவெடுபார் என தெரிவித்துள்ளார்.