Sasikala was behind Jayalalitha

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இணையதளம், நாளிதழ், தொலைக்காட்சி என அனைத்து வகை ஊடகங்களிலும் அவரின் சிறப்பு குறித்து எழுதியும், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டும் வருகிறது. அந்த வகையில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியும் ஜெ.யின் சிறப்பை செய்தி தொகுப்பாக வெளியிட்டது. மற்ற தொலைக்காட்சிகளில், ஜெ.யின் சிறப்பை மட்டும் ஒளிபரப்பிய நிலையில், ஜெயா ப்ளஸ்
தொலைக்காட்சியில், ஜெயாலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சசிகலாதான் என்று கூறி ஒரு செய்தி தொகுப்பை ஒளிப்பரப்பியது. அதில் ஜெயலலிதா என்ற வெளிச்சத்துக்கு திரியாகவும், மெழுகாகவும் இருந்தவர் சசிகலா தான் என்றும் ஒளிபரப்பாகியது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக காமானார். அவரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.கள், தொண்டர்கள் என அமைதி பேரணி நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சேனல்களிலும் ஜெயலலிதா குறித்து சிறப்பு தொகுப்பு ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும், ஜெயலலிதா குறித்து தங்கள் நினைவுகளை திரையுலக பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் செய்தி தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் சிறப்புகள் குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஜெயலலிதாவுக்கு நிகராக, சசிகலா குறித்தும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி சிறப்பு தொகுப்பை வெளியிட்டது.

அந்த தொகுப்பில், ஜெயலலிதாவின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் சசிகலாதான் இருந்தார் என்று ஒளிபரப்பாகியது. பட்டுப்புடவைக்கும் பின்னால் இருக்கும் பல்லாயிரம் பட்டு புழுக்களைப்போல், ஜெயலலிதாவின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் சசிகலாதான் என்று அதில் கூறப்பட்டது.

வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் மெழுகுவர்த்தியின் கண்ணீரைப்போல் ஜெயலலிதாவின் வெளிச்சத்துக்குப் பின்னால் மெழுகுவர்த்தியாகவும், திரியாகவும் இருந்தவர் சசிகலாதான் என்றும் அந்த செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்காக தனது 33 வருட வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சசிகலா. அவரது வார்த்தைக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும் ஒளிபரப்பாகியது. மேலும் கழகத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதே அவரது லட்சியம் என்றும் கூறப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சசிகலாதான். காலம் சந்தர்ப்பவாதிகளை மறக்கும்; சசகாப்தத்தை மறக்காது என்றும் செய்தி தொகுப்பில் தெரிவிக்கப்பட்டது.