Sasikala Warns TTV Dinakaran Supporters

பிரதமர் மோடியின் கோபத்திற்கு ஆளாகாதவாறு எப்படி நடந்து கொள்வது? என்பது பற்றி மட்டுமே சிந்தித்து செயல்பட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், கட்சியை எப்படி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் தினகரன். அதனால், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மற்றும் எம்.பி க்கள் பேசி வருவதை பார்க்கும்போது, கட்சியும், ஆட்சியும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது போன்ற தோற்றம் உருவாகி விட்டது.

இதை கொஞ்சம் கூட ரசிக்காத சசிகலா, கடும் கோபத்தில் இருந்துள்ளார். நாம் இல்லாதபோது, கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்துவான் என்றே அவனிடம் ஒப்படைத்தேன். ஆனால், அவன் அனைத்தையும் அவன் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிக்கிறானா? என்று தம்மை சந்தித்த கட்சி நிர்வாகிகளிடம் கோபப்பட்டிருக்கிறார் அவர். அதற்கேற்றாற்போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசிகலா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும், அவரது பெயரை ஒரு அமைச்சர் கூட உச்சரிக்காததையும், மன்னார்குடி உறவுகளே சசிகலாவிடம் போட்டு கொடுத்து அவரது கோபத்தை இன்னும் அதிகமாக்கி உள்ளனர்.

அத்துடன், குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு தேவை என்றால், கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனை, பாஜக தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆதரவு கோர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி இருந்தது, டெல்லிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சசிகலாவை சிறையில் சந்தித்த தம்பிதுரை, இந்த விஷயத்தை, அவரது கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இதுவும் அவரது கோபத்தை தூண்டி இருக்கிறது. இந்நிலையில், சிறையில் தம்மை சந்தித்த தினகரன் ஆதரவு நிர்வாகிகளிடம் தமது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சசிகலா.

ஜெயலலிதா இறந்தபோது, எவ்வளவு போராடி பாஜகவின் முயற்சியை முறியடித்து, கட்சியை சிதறுண்டு போகாமல் காப்பாற்றினேன். அதன் விளைவாக சிறைக்கும் வந்தேன். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும், கட்சி உடைந்து போகக் கூடாது என்று போராடி கொண்டிருக்கிறேன். ஆனால், தினகரனோ, தனி, தனியாக அணி சேர்த்து கட்சியை உடைக்கும் வேலையில் ஈடுபடுகிறாரா?

இனியாவது அமைதியாக இருக்க சொல்லுங்கள். பேச்சாளர்களும் வாய்க்கு வந்தபடி பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். அதையும் மீறி ஆட்டம் போட்டால், அனைவரும் கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் என்றும் கடுமையாக பொரிந்து தள்ளி இருக்கிறார் சசிகலா. இதனால் வாயடைத்து போன தினகரன் ஆதரவு நிர்வாகிகள், எந்த ரீ ஆக்ஷனையும் காட்டாமல் அங்கிருந்து கிளம்பி வந்துள்ளனர் என்கின்றனர் அதிமுக முக்கிய புள்ளிகள்.