Sasikala TTV Dinakaran is the reason for the twin leaf problem
இரட்டை இலை வழக்கு விசாரணையின்போது, தினகரன் தரப்பு பல உண்மைகளை மறைத்தும் திரித்தும் கூறியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், அணியினருக்கும், டிடிவி தினகரன் அணியிருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, இன்று 7 ஆம் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 1 ஆம் தேதி நடந்த 5 ஆம் கட்ட விசாரணையின்போது இரு அணியினரின் வழக்கறிஞர்களும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து கடுமையாக வாதிட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புகளை வாசித்த டிடிவி தினகரன் தரப்பினர் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க முடியாது என்று வாதிட்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதங்களை முன்வைத்தார். மேலும், தங்கள் தரப்பு வாதங்களை
முன்வைக்க அவகாசம் கேட்டனர். ஆனால், டிடிவி தினகரன் அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக எடப்பாடி அணியினர் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தங்களது தரப்பு வாதத்தை முன் வைத்து வாதிட்டு வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி விளக்கமளித்து வருகிறார்.
இதன் பின்னர், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா பெயரை கூறி மக்களிடம் வாக்கு கேட்க தொண்டர்கள் தயக்கம் காட்டுவதாக கூறினார். டிடிவி தினகரன் பெயரையும் பயன்படுத்த முடியாது என்று தொண்டர்கள் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். டிடிவி தினகரன் தரப்பு பல உண்மைகளை மறைத்தும் திரித்தும் கூறியுள்ளதாகவும் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகின் வாதம் முடிவடைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார். இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
