டி.டி.வி. தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் தினகரன் மீது சசிகலா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் இல்லாமல் மக்களவை தேர்தலை தினகரன் எதிர்கொள்வதை சசிகலா சற்றும் விரும்பவில்லை. மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைத்துள்ள பலமான கூட்டணியும் சசிகலாவை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கூட்டணி விவகாரத்தில் தினகரன் சரியான முயற்சிகளும் சரியான முடிவுகள் எடுக்கவில்லை என்றே சசிகலா கூறியிருந்தார். 

இடைத்தேர்தலை போல் மக்களவை பொதுத்தேர்தலை சந்திப்பது என்பது எளிமையானது அல்ல என்று சசிகலாவிற்கு நன்கு தெரியும். தற்போதைய சூழலில் கூட்டணி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு சென்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது என்றும் சசிகலாவிற்கு தெரியும். அப்படியிருந்தும் தினகரன் தனியாக 40 தொகுதிகளில் களமிறங்கப் போவதாக கூறி இருப்பது சசிகலாவை மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் மத்திய பாஜக மற்றும் அதிமுக அரசை எதிர்த்து நாம் நீதிமன்றத்தை மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகினாலும் தோல்விதான் என்று சசிகலா கூறினார். ஆனால் அவற்றை ஏற்க தினகரன் மறுத்தவிட்டார். 

இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த போது தினகரனுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. வெற்றிவேல், பழனியப்பன் ,செந்தில் பாலாஜி என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தினகரன் பின்னால் அணி வகுத்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தினகரனுடன் இருந்து ஒவ்வொருவராக பிரிய ஆரம்பித்தனர். தினகரனின் மிகத் தீவிரமான ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கூட அவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். இதேபோல் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவர் என்று கூறப்பட்ட செந்தில் பாலாஜியும் கடந்த ஆண்டு திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளராகவும் ஆகிவிட்டார். அதபோல் அமமுகவின் முக்கிய நபராக கருதப்பட்ட கலைராஜன் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் இரட்டை இலை வழக்கு நிலுவையில் இருப்பதால் வரும் மக்களவை தேர்தலில் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, கட்சி பதிவு செய்யப்படாததால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது. 

 

இறுதியில் இது குறித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமமுக பதிவு செய்யப்படாத அரசியல் கட்சியாக இருப்பதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தார். மேலும் பொதுசின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரீசிலிக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில் அன்றே சசிகலா அதிமுக மற்றும் பாஜக எதிர்த்து நாம் எதை செய்தாலும் தோல்வியில் முடியும் என டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.