Sasikala team MLA are support Edapadi K Palanisami
மடியில் கணம் இருந்தால் தானே, வழியில் பயம் வரும். தற்போது தமிழத்தில் கனத்த மடியோடு திரிபவர்கள்தான், மத்திய அரசின் வழியாக பயத்தில் பயணிக்கின்றனர்.
என்ன மிரட்டினாலும், தினகரனை விட்டு வரும் நிலையில் இல்லாத எம்.எல்.ஏ க்களும், அமைச்சர்களும் ஒரு சில நாட்களிலேயே, தினகரனுக்கு எதிராக அரை கூவல் விடுக்கிறார்கள் என்றால், அதற்கு பின்னணியில் காரணம் இல்லாமல் இருக்குமா என்ன?
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள் அனைவருக்கும், கோடிக்கணக்கில், பணமும் கிலோ கணக்கில் தங்கமும் வழங்கப்பட்டதாக அப்போதே தகவல் கசிந்தது.

அப்போது, எம்.எல்.ஏ க்களுக்கு தங்கம் வழங்கிய வைரவியாபாரியை, தமது வளையத்திற்குள் கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது மத்திய அரசு.
அவ்வளவுதான், யார், யார்க்கு எத்தனை கிலோ தங்கம் கொடுக்கப்பட்டது என்பதை ஆதாரங்களுடன் புட்டு, புட்டு வைத்த அந்த வியாபாரி, அதை முன்னின்று டீல் செய்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் என்றும் போட்டு கொடுத்து விட்டார்.
சரி, போகலாம் என்று அவரை அனுப்பி வைத்த அதிகாரிகள், தேவை ஏற்படும் போது சொல்லி அனுப்புகிறோம் அப்போது வரவேண்டும் என்ற நிபந்தனையோடு வெளியில் அனுப்பி விட்டனர்.

அதன் பிறகு, தினகரன் ஆடிய ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்து வந்த மத்திய அரசு, எம்.எல்.ஏ க்களை எல்லாம், தினகரனுக்கு எதிராக அணி திரட்டுங்கள் என்று ரகசிய உத்தரவு ஒன்றை எடப்பாடிக்கு போட்டது.
அவர்கள் அனைவரையும், வளைப்பது மிகவும் சிரமம் என்று எடப்பாடி கூறி இருக்கிறார். அதற்கு, நீங்கள் அமைச்சர்களை விட்டு பேசுங்கள், எல்லாம் தாமாக நடக்கும் என்று மேலிடம் கூறி உள்ளது.
எடப்பாடி சார்பில், அமைச்சர்கள் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கு முன்பே, வைர வியாபாரி மூலம் கொடுக்கப்பட்ட தங்கத்திற்கான, பில் அனைத்து எம்.எல்.ஏ க்களுக்கும் அனுப்பப்பட்டது.
அதை கண்டு ஆடிப்போன எம்.எல்.ஏ க்கள், வைர வியாபாரியை தொடர்பு கொண்டு அலற ஆரம்பித்து விட்டனர். அப்போது, உங்களை சந்திக்கும் அமைச்சர்கள் சொல்வதற்கு ஓ.கே. சொல்லுங்கள், மற்றபடி பாதிப்பு வராமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று அவர் சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகே, தங்களை அணுகிய அமைச்சர்களிடம், தினகரனுக்கு எதிரான நடவடிக்கைக்கு, எம்.எல்.ஏ க்கள் பலரும் ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர்.
