சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், மூன்று பேரும் இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது சரண் அடைய முடியாது என 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் சசிகலா.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இதைதொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, மனுதாரர்கள் பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
நீதிபதீகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சசிகலா தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் , தன்னால் தற்போது நீதிமன்றத்தில் சரண் அடைய முடியாததால் 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் விசாரைணை இன்று நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, அவகாசம் தரமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
மேலும், சசிகலாவுக்கு வழங்கிய தீர்ப்பின் நகல், கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது. இதனால், இன்று மாலைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் 28வது அறையில், நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனர்.
