பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசின் உள்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசிக்கின்றனர். இதுபற்றி முதல்வர் சித்தராமையாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பது, சிறப்பு வசதிகளை பெறுவது, எம்பி, எம்எல்ஏக்களை சந்திப்பது என ச‌சிகலா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

“சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகிறார்” என டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். ஆனால், டிஜிபி சத்தியநாராயண ராவ், ரூபாவின் புகாரை மறுத்துவிட்டார். ஆனாலும், சிறை முறைக்கேடு தொடர்பாக அடுத்தடுத்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகவும், உள்துறையை கண்காணிக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து சித்தராமையா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக்குழுவை அமைத்தார்.

சசிகலா லஞ்ச கொடுத்த விவகாரத்தில் சிறை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கைதிகளுக்கு இடையே இரு குழுக்கள் உருவானது. இதையடுத்து, 50க்கு மேற்பட்ட கைதிகள் பெல்லாரி, குல்பர்கா உள்ளிட்ட சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

சில கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் சசிகலா, அப்துல் கரீம் தெல்கி, பிரபல தாதாக்கள் உள்ளிட்ட பணக்கார கைதிகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வசதிகளை வழங்க வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல சிறைக்கு வெளியே உள்ள கைதிகளின் குடும்பத்தார் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, முதல்கட்டமாக, சிக்கலில் சிக்கிய சிறை அதிகாரிகள் டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், சசிகலா பெங்களூரு சிறையில் தொடர்ந்து விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரு காரணங்களையும் பரிசீலித்து அவரை கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக துமக்கூரு, மைசூரு ஆகிய இடங்களில் மகளிருக்காக தனியாக உள்ள சிறைகளை பரிசீலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சசிகலாவை வேறு மாநில சிறைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதால் வேறு மாநில சிறைக்கு மாற்ற முடியாது. இதனால், உள்துறை அதிகாரிகளின் அறிக்கையை கொண்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா, சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.