சிறையில் இருந்து விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் சசிகலா குலுங்கி குலுங்கி அழுததாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா இன்னும் சில மாதங்களில் விடுவிக்கப்பட உள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில், ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் என்றும், அப்போது சசிகலா 10 நிமிடம் கண் கலங்கி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் சசிகலா, இளவரசியோடு மற்ற சிறைக் கைதிகளும் கலந்துகொண்டதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எளிய பின்னணியில் இருந்து வந்த சசிகலாவை தன் உடன்பிறந்த சகோதரியாக, தன் நிழலாக அங்கீகரித்தவர் ஜெயலலிதா. நெருக்கடியான தருணங்களில் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக நின்ற சசிகலா, போயஸ் தோட்டத்தின் சக்தியாக உருவெடுத்தார். எத்தனையோ சோதனைகள், பிரிவுகள் வந்த போதும், சசிகலாவை எந்த இடத்திலும் ஜெயலலிதா விட்டுக்கொடுத்ததே இல்லை.