கூடிய விரைவில் சசிகலா வெளியே வந்துவிடுவார்! என்று டெல்லி செங்கோட்டை, தமிழக தலைமை செயலகம், பெங்களூர் பரப்பன சிறை வளாகம் ஆகிய இடங்களில் வளைய வளைய வலம் வரும் ஒரு பட்சி சொல்லிக் கொண்டே இருக்கிறது. 

அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறதாம். அதாவது, ’இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க.வை வைத்துக் கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த வெற்றியையும் நாம் பெற முடியாது. இப்படியொரு சூழலில் அ.தி.மு.க. கூட்டணியை நாம் தொடர்வதும் நல்லதில்லை.  அதற்காக தி.மு.க.வும் நம்மோடு வராத நிலையில், கையிலிருக்கும் திராவிட கட்சியான அ.தி.மு.க.வுக்கு புதுப்பொலிவை கொடுத்தே தீரவேண்டும். அதற்கு ஒரே ஆப்ஷன் சசிகலாதான். கர்நாடகாவில்  நமது ஆட்சி அமைந்துவிட்ட நிலையில், சிறை விதிகளில் உட்புகுந்து, நன்னடத்தை அடிப்படையில் சசியை விரைவில் ரிலீஸ் செய்யலாம், அவர் தலைமையில் அக்கட்சியை ஒருங்கிணைத்து புது தெம்பை உருவாக்க முயலலாம். ஆனால் எச்சூழலிலும்,  தினகரனை உள்ளே அனுமதிக்க கூடாது!’ என்பதுதான் அந்த முடிவு. 

டெல்லியே சொல்லிய நிலையில் அ.தி.மு.க.வின் தற்போதை ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் ஓ.கே. சொல்லிவிட்டனர். இந்த திடீர் மடைமாற்றங்கள் தினகரனின் கவனத்துக்கும் வந்துவிட்டது. அதேபோல் சிறையிலிருக்கும் சசிகலாவுக்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. சசி இதை குஷியோடு ஏற்றுக் கொள்வார்! என எதிர்பார்த்த நிலையில், அவர் இப்போது ஒரு பிரேக் போடுகிறாராம். அதாவது ‘என் மனம் பெருசா புண்பட்டிருக்குது. அக்காவின் (ஜெ.,தான்) மரணம், சிறைவாசம், நம்பி ஆட்சியை கொடுத்த நபர்களின் துரோகம், தினகரனின் தவறுகள், குடும்ப பிரச்னைகள்ன்னு எட்டு திசையிலும் கவலைகள். அதனால நான்கு ஆண்டுகள் கழித்தோ அல்லது நன்னடத்தை படி இன்னும் சில மாதங்களிலோ, எப்போது ரிலீஸானாலும் நான் உடனடியா அரசியலுக்கு வரமாட்டேன். எனக்கு இப்போ மனம் இருக்கும் சூழலில் அரசியலில் உருப்படியா எதையும் சிந்திக்க முடியாது, தீர்க்கமான முடிவெடுக்க முடியாது. 

அதனால அக்காவின் ரூட்டில் அமைதியாக சில காலம் வாழ்க்கையை கொண்டுபோகப்போறேன். ஆட்சியை இழந்து, கட்சியின் செல்வாக்கும் சுருண்டு கிடந்தப்ப அக்கா கொடநாடு பங்களாவில் தங்கி, அமைதியா யோசிச்சு சில முடிவுகளை எடுத்தாங்க 2011ல். அதுக்கு பிறகு அவங்களுக்கு தோல்வியே இல்லை. அது மாதிரி எனக்கும் ஒரு தனிமை வேண்டும், தனி வீடு வேண்டும்.” என்றிருக்கிறார். ஆக, ரிலீஸானதும் சசி தீவிர அரசியலுக்குள் வருகிறார், அ.தி.மு.க.வின் தலைமையை கையிலெடுக்கிறார்! ஆனால் தனக்கு மட்டும் அங்கே இடமில்லை....என்று பரவும் தகவல்களை கேட்டு புண்பட்டுக் கிடந்த தினகரன், சசியின் முடிவுகளைக்  கேட்டு ஏக குஷியாகிவிட்டாராம். 
ஜெயலலிதாவுக்கு கொடநாடில் ஒரு தனிமை பங்களா இருந்தது போல் சசிகலாவுக்கு கொடைக்கானலில் ஒரு பங்களாவை உருவாக்கப்போகிறார்களாம். 

கொடைக்கானலை ஒட்டியுள்ள் மேல்பள்ளம், சின்ன பள்ளம் ஆகிய இடங்களை இந்த பங்களா கட்டுமானத்துக்காக அலசியிருக்கிறார்களாம். இவற்றில் ஏதோ ஒன்றில் சசி பங்களா அமையலாம். சசியின் இந்த தீடீர் முடிவு அ.தி.மு.க.வின் தற்போதைய அதிகார மையங்கள் இரண்டையும் குழப்பியிருக்கிறது. அரசியலுக்கு இப்போதைக்கு வரமாட்டேன்! என்று சசி பண்ணும் அடத்துக்கு தங்கள் கழுத்தில் கத்தியை டெல்லி வைக்குமே என்பதுதான் அந்த பயம். ஆனால் தினகரனும், சசியின் ஆதரவாளர்களும் குஷியில் இருக்கின்றனர். ஜெயலலிதா பங்களாவை பார்க்க கொடநாடு போகணும் என்றால், சசி பங்களாவுக்கு கொடரோடு போகணும்! அட்ரா சக்க!