திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலில், திமுக கூட்டணிதான்  ஜெயிக்கும்’, தினகரன் சொல்றதெல்லாம் பச்சை பொய் என சசிகலாவின் தம்பியும், தினகரனின் மாமாவுமான   திவாகரன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் காலமானதையடுத்து, திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் மறைந்ததும்  காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்துக் கட்சிகளிடையேயும் நிலவி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு ‘திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெறும்’ என்று அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய, சசிகலாவின் தம்பியும்,  தினகரனின் மாமாவுமான திவாகரன், திருவாரூர் தொகுதி திமுக தலைவர் கலைஞருடையது, இடைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிதான் வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள் நடுநிலையாக இருப்போம். தேர்தல் தொடர்பாக தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

திமுக கலைஞர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்ட திவாகரன்,  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது தமிழர்களின் கடமை, கருணாநிதி போன்றவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சுமார் இரண்டு கோடி உறுப்பினர்கள் வரை இணைந்திருப்பதாக தினகரன் கூறி வருகிறார். ஆனால் அது உண்மையல்ல வடிகட்டிய பொய். எந்தக் கட்சியிலும் 50 லட்சத்துக்கும் மேல் உறுப்பினர்கள் இல்லை என்று தெரிவித்தார். தினகரன் பணத்தைக்  வைத்து அரசியல் செய்கிறார். பொதுக்கூட்டங்களுக்கும் பணம் கொடுத்தே ஆட்களைக் கூட்டுகிறார் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.