சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி காலை சசிகலா பெங்களூரு செல்ல புறப்பட்டார். அப்போது அவர் திடீரென ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். சற்று நேரம் இருந்தார். சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கீழே குனிந்தார். பூப் போட்ட கையோடு உடனே மூன்று முறை சமாதியில் அடித்து ஏதோ சத்தியம் செய்தார். ஒவ்வொரு முறையும் தன் கைகளில் ஒட்டிக் கொண்டு வந்த பூக்களைத் துடைத்து, மீண்டும் அடித்து சத்தியம் செய்தார். அப்போது ஏதோ சபதம் செய்தது போல் வாயை அசைத்தார். .. அவ்வளவுதான்! 

அப்போதைய பரபரப்புச் செய்தி அதுவாகத்தான் இருந்தது. அவர் அப்படி என்ன சபதம் செய்தார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, உடன் இருந்த கட்சிப் பிரமுகர்கள் சொன்னார்கள்... 

அம்மாவின் மீது ஆணையிட்டார் சின்னம்மா. ஓபிஎஸ்ஸை ஒழிப்பேன். அவருக்கு பின்னணியில் உள்ளவர்களை அழிப்பேன். அதிமுகவை கைப்பற்றுவேன்... என்பதாக உடனிருந்தவர்கள் கூறினார்கள். ஆனால் சசிகலா உண்மையில் அத்தகைய சபதங்களை எடுத்தாரா என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதுதான். 

கிட்டத்தட்ட 234 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளியாக, சென்னை வரும் வாய்ப்பு கிடைத்தது சசிகலாவுக்கு. உடல் நலம் இன்றி சிகிச்சையில் இருந்த தன் கணவர் உடல் நிலை குறித்து விசாரித்து அறிய சென்னை  வர பரோலுக்கு விண்ணப்பித்தார். 

இதற்கிடையில், சசிகலா குடும்பத்தில் சில துர் மரணங்கள் ஏற்பட்டன. குடும்பத்தில் அமைதி குலைந்து, தகராறுகள் வெடித்தன. அதற்கு, ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என்று ஒரு தரப்பு மந்திரம் தந்திரம் மாந்திரீகம் என்றெல்லாம் கருத்துகளை அவிழ்த்து விட, இயல்பில்  கடவுள் பக்தி கொண்ட சசிகலா குடும்பத்தினர் அதற்காக கோயில்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். 

இந்நிலையில், பரோலில் வந்த சசிகலா, தான் முன்னர் ஜெயலலிதா சமாதியில் செய்த சபதத்தை நினைவுகூர முதலில் சமாதிக்குத்தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோலின் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. தான் தங்கப் போகும் இடம், மருத்துவமனை ஆகியவற்றைத் தவிர, சசிகலா வேறு எங்கும் செல்லக் கூடாது, அரசியல் ரீதியான சந்திப்புகள் இருக்கக் கூடாது என்று நிபந்தனைகள் இருந்ததால், ஜெயலலிதா சமாதிக்குச் செல்லும் முடிவை சசிகலா தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆன்மா மீதான பயத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்தார் என்றும், இருப்பினும் ஜெயலலிதாவை தான் மறந்து விடவில்லை என்று காட்டுவதற்காகவே கட்சித் தொண்டரின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியபோது ஜெயலலிதா என்று ஒரு பெண்குழந்தைக்கு பெயர் சூட்டினார் என்றும் கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்தது. 

எப்படியோ.... ‘ஜெ’ சமாதியில் மூணு அடி அடிச்சு ‘உள்ளே’ போனவங்க... பரோல் முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்ற இப்போது அந்த பயத்திலேயே திரும்பியதாகக் கூறப்படுகிறது.