கூவத்தூர் ரிசார்டில் 4 மணி நேர மின்சாரம் இல்லாத நேரத்திலும் அடம்பிடித்து ஒரு நாள் முழுதும் அமர்ந்திருந்த சசிகலா 24 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றார்.
சசிகலா , ஓபிஎஸ் என அதிமுக இரண்டு துருவங்களாக பிரிந்து நிற்க இருபுறமும் ஆதரவு கூடிவர கடந்த 7 ஆம் தேதிமுதல் அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
தீர்ப்பு வரும் நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா உரிமை கோர ஆளுநர் நாள் கடத்த , நேற்று காலை தனது மிரட்டலான பேச்சை காட்டினார் சசிகலா.
எத்தனையோ ஆயிரம் பன்னீர்களை பார்த்துள்ளேன் இதெல்லாம் எனக்கு தூசு , 33 ஆண்டுகள் நான் சந்திக்காத பிரச்சனையா? எதையும் சந்தித்த எனக்கு இதையும் சந்திக்க தெரியும். நான் சிறையை ஏற்கனவே பார்த்துவிட்டேன் ஆகையால் அஞ்ச மாட்டேன்.என்றெல்லாம் பேசியவர் கூவத்தூருக்கு கிளம்பி சென்றார்.
அங்குள்ள குடிசை பகுதி மக்களிடம் பேசியவர் அங்குள்ள எம்.எல்.ஏக்களுடனேயே தங்கிவிட்டார். மறுநாள் காலை சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வர நான்கு ஆண்டு சிறைவாசம் உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னரும் கூவத்தூரை விட்டு கிளம்பாத சசிகலா பின்னர் சட்டமன்ற கட்சித்தலைவராக எடப்பாடியை தேர்வு செய்தார்.
எதிர் முகாமில் உள்ள அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார். பின்னர் இரவு கூவத்தூரை விட்டு கிளம்பிய சசிகலா கிளம்பும் முன்னர் எம்.எல்.ஏக்களிடம் உருக்கமாக கண்ணீர் ததும்ப பேசினார்.
எங்கிருந்தாலும் என் நினைப்பு உங்களிடம் தான் இருக்கும் . உங்களை விட்டும் , அதிமுகவை விட்டும் என்னை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. எனக்கு வந்த பிரச்சனை தற்காலிக பிரச்சனைத்தான்.
அதை எப்படி தீர்க்க வேண்டுமென்பது எனக்கு த்தெரியும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். என்று உருக்கமுடன் கேட்டுகொண்டார்.
பின்னர் காரில் புறப்பட்டு போயஸ் கார்டன் சென்றார். இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு சென்று நீதிமன்றத்தில் சரணடைகிறார்.
