Asianet News TamilAsianet News Tamil

அதிகாரப் போட்டி... குடுமிப்பிடிச் சண்டை... தகராறைத் தீர்க்க முடியாமல் கண்ணீர் வடித்த சசிகலா! 

sasikala return bangalore prison after parole end today without any expectations
sasikala return bangalore prison after parole end today without any expectations
Author
First Published Oct 12, 2017, 2:16 PM IST


அதிமுக., என்ற மாபெரும் சொத்தைக் கைப்பற்ற இத்தனை காலம் காத்திருந்த சசிகலாவுக்கு, இப்போது அது இலவு காத்த கிளி என ஆகிப் போனதாகத்தான் தோன்றியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் தன் காலடியில் என்று கனவு கண்டு காய் நகர்த்தினார் சசிகலா. அதனால், ஏற்கெனவே தன் மூலம் வளர்க்கப்பட்டு ஜெயலலிதாவின் விசுவாசி என அடையாளப் படுத்தப் பட்ட ஓபிஎஸ்.,ஸை முதல்வராக முன்னிறுத்தி, கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றார். அந்தச் சுழலியே, திவாகரன் மற்றும் தினகரனின் கை, கட்சியில் ஓங்கியது. 

வழக்கம் போல், பன்னீர்செல்வம் கைபொத்தி வாய்பொத்தி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க.... எல்லாம் சரியாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென குடும்பத்தினர் கொடுத்த ஆலோசனையில், சசிகலாவையே முதல்வராக்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் எழுந்த நடவடிக்கைகள், பன்னீர்செல்வத்தை பொங்கி எழ வைத்து, ஒரு நாடகத்தை நடத்தத் தூண்டியது. 

விளைவு, கட்சி இரண்டாகப் பிளந்தது. ஆட்சியைத் தக்க வைக்க கூவத்தூர் நாடகம் நடத்தியபோதும், அந்த நாடகத்தின் திரையை அப்போதைய ஆளுநர்  முன்னதாகவே திறந்துவிட்டதால், சசிகலாவின் முதல்வர் கனவு முழுமை பெறாமல் போனது. அடுத்து, உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை எழுத, சசிகலா சிறை செல்ல நேரந்தது. 

இடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்துவிட, அந்தத் தேர்தலில் கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி தினகரன் தானே களம் இறங்கினார். அப்போது வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில், தினகரன் தரப்பு நாறிப் போக, முதலமைச்சர் முதல் பல அமைச்சர்களும் பணப் பட்டு வாடா விவகாரத்தில் வருமான வரித்துறையிடம் சிக்கிக் கொள்ள, அது மத்திய அரசின் கவனத்துக்கு வந்து பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி தரப்புக்கு நெருக்குதல் வர,  அண்ணன் வழியே தன் வழி என சசிகலாவால் முன்னிறுத்தப் பட்ட எடப்பாடியாரும், ஓபிஎஸ் வழியில் ஒதுங்கிவிட, கட்சிக்குள் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தலை தூக்கக் கூடாது என்று அடிமட்டத் தொண்டர் வரை கருத்தைச் சொல்லும் விதத்தில் செயல்பட்டனர் எடப்பாடி குழுவினர். 

இதனிடையே, ஓபிஎஸ்., ஈபிஎஸ்., இருதரப்பும் இணைய தாம் ஒன்றும் தடையாக இல்லை என்ற கருத்தை விதைத்து, சிறை சென்று, சிறையில் இருந்து வெளிவந்த போதும் அமைதியாக ஒதுங்கியிருப்பது போல் இருந்தார் தினகரன். ஆனால், எந்தக் காரணத்தால் இரு தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று தினகரன் விரும்பினாரோ அந்த எண்ணம் கைகூடாமல் போனது தினகரனுக்கு! அதனால், அதிமுக.,வில் சசிகலாவின் குடும்ப செல்வாக்கு பெருமளவு தகர்க்கப்பட்டது. இந்த நிலைக்குக் காரணமானது, தினகரன் எடுத்த முடிவுகளும், கூடவே சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பேச்சுகளும். அவர்கள் இருவருமே சில பிரச்னைகளில் மாறு பட்ட கருத்துகளைத் தெரிவித்து, தங்களுக்குள் மன வேறுபாடுகள் உள்ளன என்று ஊடகங்களில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்கள். நீட் தேர்வு, அனிதா மரணம், திமுக., சார்பு என பல்வேறு விஷயங்களில் இருவரின் முரண்பாடான பேச்சுகளும் அந்த இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டின. 

இந்நிலையில்தான், பரோலில் வெளிவந்த சசிகலா, தான் விட்டுச் சென்ற நிலையில் கட்சியும் ஆட்சியும் இக் குறுகிய காலத்துக்குள் தன் கையை விட்டுப் போனதில் மிகவும் அப்செட் ஆகிப் போனார். இதற்கு, தினகரனும், திவாகரனும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர். இரு தரப்பும் வாசித்த குற்றச்சாட்டுகளை கூர்ந்து கேட்ட சசிகலாவுக்கு கண்ணீர்தான் திரண்டது. 

நிலைமை இந்த அளவு மோசமாகக் காரணம் தினகரன்தான் என திவாகரன் தரப்பு கூறியது. ஜெயலலிதா ஆட்சியின் போது, நாம் எப்படி செயல்பட்டோமோ, அப்படியே இப்போதும் செயல்பட்டிருந்தால், ஆட்சியும் கட்சியும், நம் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்' என்று கூறியுள்ளனர் திவாகரன் தரப்பினர். 

ஆனால், பதிலுக்கு தினகரன் தரப்பு, பன்னீர்செல்வம், எடப்பாடி என இரு தரப்பிடம் இருந்தும் கட்சியைக் காப்பாற்றத்தான் தினகரன் முயற்சி எடுத்தார் என்று சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தச் சண்டைகளில் விருப்பம் இல்லாத தினகரன் துவக்கத்திலேயே திருச்சி, தஞ்சை என கிளம்பிவிட்டாராம். அவரை மீண்டும் வரவழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா என்கிறார்கள்.  அப்போது, 'திவாகரன் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்” என்று தினகரனிடம் கட்டளை இட்டாராம். அதற்கு தினகரன், “அவர் பேச்சைக் கேட்பதற்கு பதில் வேறு வேலை பார்க்கலாம்” எனக் கூறி ஒதுங்கிக் கொண்டாராம்.  

இப்படி தினகரன், திவாகரன் இருதரப்பு மோதலையே சரிக்கட்ட முடியாமல் திணறிப் போய் இருக்க, மேலும் ஒரு தலைவலியும் அப்போது சசிகலாவுக்கு சேர்ந்து கொண்டது. சசிகலா மருத்துவமனைக்குச் சென்று வர, தனது மகன் ஜெயானந்த் தலைமையில் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தார் திவாகரன். ஆனால் இந்தச் செயல் தங்கள் வீட்டில் தங்கியிருக்கும் நிலையில்  இளவரசியின் மகன் விவேக்குக்குப் பிடிக்காமல் போயுள்ளது. அவர்கள் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்க, சசிகலா கண்ணீர் விட்டு அழுதாராம். 

குடும்பத் தகராறைத் தீர்க்கவே நேரம் போதாமல் சசிகலா முடங்கிப் போனதால், பரோலில் வெளிவந்த காலத்தில் அரசியல் மாற்றத்தையே சசிகலா உருவாக்கிவிடுவார் என்று கூறப்பட்ட அனுமானங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த ஆறு நாட்களும் தமிழகத்தில் ஏதோ அரசியல் மாற்றம் நிகழும் என்று கூறப்பட்ட அத்தனை அனுமானங்களையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கியது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திரைமறைவு நடவடிக்கைகள்தான் என்று கூறுகிறது கட்சி வட்டாரம்! 

Follow Us:
Download App:
  • android
  • ios