Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை மீட்டெடுக்க உதவுங்க… மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த சசிகலா!! | Sasikala

#Sasikala | மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசு, உரிய வெள்ள நிவாரண  தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

sasikala request central govt regarding flood relief
Author
Tamilnadu, First Published Nov 24, 2021, 3:48 PM IST

மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க மத்திய அரசு, உரிய வெள்ள நிவாரண  தொகையை உடனே வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை, மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர். தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளிலிருந்து மீண்டு வர, மத்திய அரசு உரிய நிவாரண தொகையை, தமிழகத்திற்கு உடனே வழங்கமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் எண்ணிலடங்காது. முக்கியமாக, இதில் பல மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் தங்களின் வீடு, உடைமைகள், தங்கள் வீட்டில் வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகள் போன்ற உயிரினங்களையும் இழந்து, வாழ வழியின்றி, நிர்கதியாய் நிற்கிறார்கள். அதே போன்று, விவசாயிகள், தங்கள் விளைநிலங்களை வெள்ளம் சூழ்ந்து, சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து செய்வதறியாது பரிதவிக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களும், வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளன.

sasikala request central govt regarding flood relief

பல இடங்களில் ஏழை எளிய மக்கள், தங்கள் வாழுகின்ற குடிசை வீடுகளில் கழிவு நீர் கலந்த மழை நீர் தேங்கிய நிலையில் வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள். தமிழகத்தில் பல இடங்களில் வீடுகள் இடிந்து உள்ளன. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காமராஜபுரம் பகுதியில் பாலாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் காரணமாக, 14 வீடுகள் வெள்ளத்தால் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டதாகவும், பல வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. மேலும், இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் குடிசை மற்றும் மண் சுவர் வீடு இடிந்து, வாழ வழியின்றி தவிப்பவர்களுக்கு, கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்து அவர்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக அரசு செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.  தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து 73 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறுவை நெற்பயிர்கள் சாகுபடி செய்தவர்கள், முழுமையாக அறுவடை செய்யாமல் இருந்த நிலையில் வெள்ள நீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்துவிட்டது. அதேபோன்று சம்பா, தாளடி போன்றவை பயிரிடப்பட்டு, உரங்கள் போடப்பட்டு இருந்த நிலையில் அனைத்து பயிர்களும் வீணாகிவிட்டன.

sasikala request central govt regarding flood relief

இதன் காரணமாக, நெற்பயிர்களை இழந்து நிற்கும் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடு செய்யும் விதமாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது போன்று மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள அனைத்துவித வேளாண் பயிர்களுக்கும் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்நீர்நிலைகளில் பல இடங்களில் அணைக்கட்டுகள் உடைந்து காணப்படுகின்றன, அதேபோன்று பல மாவட்டங்களில் தரைப்பாலங்கள் சேதம் அடைந்து வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளன.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து பாதிப்புக்குள்ளாகி போக்குவரத்து இல்லாமல் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அரியலூர், பெரம்பலூர், நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோழிப்பண்ணைகளில் மழைநீர் சூழ்ந்து எண்ணற்ற கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் பாய் தயாரிப்பு, மண்பாண்ட தொழில்கள் மற்றும் விசைத்தறி தொழில்கள் இந்த மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

sasikala request central govt regarding flood relief

தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பளத்தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவ மக்களும் கடலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதன் காரணமாக, அனைத்து மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. ஆகையால், மத்திய அரசு, தமிழகத்தில் இந்த மழையால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முழுமையாக ஆய்வு செய்து, தமிழக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்புவதற்கு ஏதுவாக, உரிய நிவாரணத் தொகையை உடனே வழங்குமாறு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios