சசிகலா விடுதலை தொடர்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வகையில் சசிகலா கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்கு சென்றார். ஏற்கனவே அவர் 21 நாட்கள் சிறையில் இருந்திருந்தார். இதனால் 2021ம் ஆண்டு ஜனவரி இறுதியில் சசிகலா விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் சசிகலா இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆவார் என்று தகவல்களை வெளியிட்டு வந்தார்.

இதற்கிடையே சசிகலா எப்போது சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ந் தேதி சிறையில் இருந்து வெளியே வருவார் என்று பெங்களூர் சிறை நிர்வாகத்தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனால் சசிகலா விரைவில் விடுதலை ஆக வாய்ப்பில்லை என்றும் அவர் விடுதலை ஆக ஜனவரி 27ந் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்றும் தகவல் உறுதியானது.

ஆனால் இந்த தகவலை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சசிகலா சிறையில் இருந்த நாட்களில் நன்னடத்தை காரணமாக அவருக்கு வாரத்திற்கு 1 நாள் சிறை விடுப்பு வழங்கப்படும் என்றும் அந்த நாட்களை தண்டனை நாட்களில் கழித்துப் பார்த்தால் சுமார் 129 நாட்கள் முன்கூட்டியே சசிகலா விடுதலை ஆவார் என்று ராஜா செந்தூர்பாண்டியன் ஒரு கணக்கு போட்டுக் கொடுத்தார். அந்த வகையில் செப்டம்பர் மாத இறுதியில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் பெங்களூர் சிறை நிர்வாகம் ஒரு தேதியும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஒரு தேதியும் அவரது ரிலீஸ் குறித்து கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரத்தில் குழப்பம் நிலவுகிறது. சசிகலா உண்மையில் எப்போது வெளியே வருவார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே நன்னடத்தை விடுப்பு என்பது சிறை நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்கிறார்கள். அதனை கட்டாயமாக கைதிகள் உரிமை கோர முடியாது என்று சொல்கிறார்கள். எனவே 129 நாட்கள் வரை சசிகலாவுக்கு விடுப்பு இருந்தாலும் அதனை தண்டனையில் கழித்து அவரை விடுதலை செய்வது சிறை நிர்வாகத்தின் கைகளில் தான் உள்ளது.

எனவே ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியது போல் இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலை ஆக வேண்டும் என்றால் அதற்கு பெங்களூர் சிறை நிர்வாகம் மனது வைக்க வேண்டும். இல்லை என்றால் ஜனவரி 27ந் தேதி வரை சசிகலா காத்திருக்க வேண்டும். இதே போல் சசிகலா செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் அபராதமும் இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் 1 வருடம் சசிகலா சிறையில் இருக்க வேண்டும். செலுத்தப்பட வேண்டிய 10 கோடி ரூபாய்க்கும் உரிய கணக்கு காட்டப்பட வேண்டும். எனவே அந்த 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தும் முயற்சியும் சசிகலா தரப்பில் தொடங்கியுள்ளது.