அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது, சட்டமன்ற தேர்தல் கூட்டணி சசிகலா விடுதலை குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதே கூட்டணி வருகிற சட்டமன்ற தேர்தலில் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 தமிழக பாஜ நிர்வாகிகள்.. 'தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைமையில் தான் கூட்டணி என்று கருத்து தெரிவித்தனர். அதேபோன்று பாஜ ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என்கின்றனர்.  தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்றுதான் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும், வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் அதே நேரத்தில் அதிமுக ஆட்சி பற்றியும் அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.

 அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றால் யார் முதல்வராக வர வேண்டும் தேர்தல் பிரசாரத்தின்போது யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது. இந்த பிரச்னை கடந்தமாதம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து, அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது. அப்படி பேசினால் கட்சி சார்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து அதிமுக கட்சியினர் வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்கலாம், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவர்களுக்கு எவ்வளவு சீட் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும். முக்கியமாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலை குறித்தும் விவாதிக்க அமைச்சர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். பெரும்பாலான எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவு கரம் நீட்டவும் தயாராக இருக்கிறார்களாம்.இது எடப்பாடிக்கும் ஓபிஎஸ்க்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.