எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், 2021 தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட நாடு முழுவதும் 8 நகரங்களில் இருந்து குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை சிலையை இணைக்கும் 8 புதிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலி காட்சிகள் வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்;- சசிகலாவின் வருகை அதிமுகவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சசிகலாவின் வருகை தொடர்பாக சிலர் காணல் நீர் போன்ற செயற்கையான மாயை தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். 

மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், 2021 தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.