திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள், ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கிசான் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. திமுகவுடன் இருக்கும் பிற கூட்டணி கட்சிகள் கட்சியின் தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருக்கின்றனர்.

ஆகையால், வரும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்றார். 

மேலும், சசிகலா விடுதலையாவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர்  சசிகலா விடுதலையானாலும் அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.