சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலா நன்னடத்தை விதிகளின் வெளியே வந்தால் மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  வேலூர் மக்களவை தொகுதி தி.மு.க.வின் கோட்டை என்பது போன மாசம். இப்போது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது. தி.மு.க.வின் கோட்டை இப்போது ஓட்டையாகி விட்டது.  வேலூரில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுப்போம். வேலூரில் அ.தி.மு.க.விற்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இனிமேல் தி.மு.க. தேர்தலில் போட்டியிட தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தல் முடிவை எதிர்பார்க்கலாம் என்றார். தி.மு.க.வின் ரீமோட் கன்ட்ரோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் கையில்தான் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் பாடச் சொன்னால் மு.க.ஸ்டாலின் பாடுவார், ஆடச்சொன்னால் ஆடுவார். 

மேலும், டி.டி.வி தினகரன் சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான். சசிகலா சிறையிலிருந்து வெளிவந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது ஏமாற்றமே மிஞ்சும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எதிரிகள் அவரது நிழலைக்கூட அணுக முடியாது. தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா மட்டுமல்ல யார் சொன்னாலும் அதை முதல்வர் ஏற்றுக்கொள்வார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.