சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரும் சலசலப்பு இருக்கும் என்பதை நேற்று ஒற்றை பேட்டியில் உறுதிப்படுத்திவிட்டார் அமைச்சர் ஓஎஸ் மணியன்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சசிகலா குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக இருந்தவர் ஓஎஸ் மணியன். தொடர்ந்து தேர்தல்களில் தோற்றாலும் கூட அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அனைத்திற்கும் காரணம் ஓஎஸ் மணியனுக்கு சசிகலா தரப்பிடம் இருந்து தொடர்ந்து கிடைத்து வந்த அனுக்கிரகம் தான். 1995ம் ஆண்டே இவர் மாநிலங்களவைக்கு எம்பியாக அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பிறகு பெரிய அளவில் அதிமுகவில் தலையெடுக்காமல் திரைமறைவில் இருந்தவர்.

இந்த காலகட்டத்தில் மன்னார்குடியில் சசிகலா உறவினர்களுக்கு மிகவும் நெருக்கமானார். அந்த பகுதிகளில் சசிகலா குடும்ப சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பு இவரிடம் தான் கொடுக்கப்பட்டிருந்தாக கூட சொல்லப்படுவதுண்டு. திடீரென 2004ம் ஆண்டு மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு 2014ம் ஆண்டு தேர்தலில் மணியனுக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக பேச்சு அடிபட்டது.

ஆனால் 2016ம் ஆண்டு வேதாரண்யம் தொகுதியில் ஓஎஸ் மணியனுக்கு ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார். இதற்கு சசிகலாவின் ஆதரவு தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அங்கு வெற்றி பெற்ற மணியன் முதல் முறையாக அமைச்சராகவும் பதவி ஏற்றார. சசிகலாவிற்கு விசுவாசமாக இருந்த காரணத்தினால் தான் மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்பி பிறகு அமைச்சர் பதவி தேடி வந்தது. இதன் காரணமாக சசிகலாவிற்கு தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார் மணியன்.

இதே போல் அதிமுகவில் சசிகலா ஓரங்கட்டப்பட்டபோது கூட அவ்வப்போது சசிகலாவிற்கு ஆதரவாக சில கருத்துகளை கூறி வந்தார். ஒரு கட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் சசிகலா ஆதரவு பேச்சுகளை ஓஎஸ் மணியன் நிறுத்திக் கொண்டார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டார். இதற்கிடையே சசிகலா விரைவில் விடுதலை ஆக உள்ள நிலையில் அமைச்சர்களுக்குள் சலசலப்பு நிலவுகிறது. சசிகலா தரப்பில் இருந்து மிகவும் நம்பகமான ஆட்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அமைச்சர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். சசிகலாவை தீவிரமாக எதிர்க்க கூடிய அமைச்சர் கேசி வீரமணி கூட தற்போது சசிகலாவிற்கு எதிராக பேசுவதை தவிர்த்து வருகிறார். இதே போல் சசிகலா குறித்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் அனைவரும் மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு இடத்தை காலி செய்கின்றனர். ஆனால் அமைச்சர் ஓஎஸ் மணியன் இந்த கேள்விக்கு துணிச்சலாக அளித்த பதில் அதிமுகவில் சலசலப்பை அதிகரித்துள்ளது.

சசிகலா வந்த பிறகு கட்சி, ஆட்சியை அவர் வழிநடத்துவாரா என்று செய்தியாளர்கள் மணியனிடம் கேட்டனர். இந்த கேள்விகளுக்கு மற்ற அமைச்சர்கள் பதில் எதுவும் அளிக்காமல் ஒதுங்கிச் சென்றுவிடும் நிலையில் அமைச்சர் மணியன் மட்டும் அதனை கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார். இது அதிமுகவில் மட்டும் அல்லாமல் தமிழக அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் எந்த ஒரு இடமும் இல்லை என்று தான் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் சசிகலா விடுதலையான பிறகு கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்று மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறியிருப்பதன் மூலம் சசிகலா மீதான தனது விசுவாசத்தை ஓஎஸ் மணியன் வெளிப்படுத்தியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் கட்சி, ஆட்சியில் சசிகலா குடும்பத்திற்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக அமைச்சர் ஜெயக்குமார் சிறிது நேரத்தில் பேட்டி அளித்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேட்டி முன்பு போல் தீர்க்கமானதாக இல்லை என்றும் அவரிடமும் தயக்கம் தெரிந்ததை பார்க்க முடிந்தது.

இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது சசிகலா விடுதலை அமைச்சர்கள் பலரையும் குழப்பத்தை ஆழ்த்தியுள்ளதையும் எதிர்காலத்தை நினைத்து திக் திக் மனநிலையில்அவர்கள் இருப்பதையும் காட்டுகிறது. இப்பவே இப்படி என்றால் சசிகலா விடுதலை ஆனால்? அமைச்சர்களின் நிலை என்ன என்று டிடிவி தரப்பு கேலி பேசி சிரிக்க ஆரம்பித்துள்ளது.