அடுத்த ஆண்டில் சசிகலா விடுவிக்கப்படவுள்ள நிலையில், அவரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா 2021 ஜனவரி 27ல் விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாதபட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சசிகலா வழக்கை பொறுத்தவரை அவர் முன் கூட்டியே விடுதலையாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1997 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் சசிகலா 35 நாட்கள் வரை சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்கள் இப்போதைய தண்டனையில் இருந்து கழிக்கப்பட வேண்டும். கடந்த வருடம் 17 நாட்கள் பரோலில் அவர் வெளியே வந்துள்ளார். இதை கழித்து பார்த்தால் 18 நாட்கள் உள்ளது. இது தவிர நன்னடத்தை விதிகள், கைதிகளுக்கான விடுறை நாட்களை கழிக்கும்போது அவர் இந்த மாத இறுதியில் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனிவிமானம் மூலம் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மற்றொரு புறம் டெல்லியில் இருந்து வந்த அழைப்பின் பேரில்தான் அவரது இந்த பயணம் என்றும் சொல்லப்படுகிறது.  இதனால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.