இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள், அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமாக நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும் எல்லாம்வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்” என்று அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அப்போதே, அனைவரும் ஒற்றைமையாக இருப்போம்; திமுக ஆட்சிக்கு வராமல் தடுப்போம் என்று சசிகலா  தெரிவித்திருந்தார். தற்போது அதிமுகவில் சசிகலாவை இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சசிகலாவை அதிமுகவில் இணைக்கவோ அல்லது அமமுகவை கூட்டணியில் சேர்க்கவோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் பிறகாவது எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வந்து அதிமுக - அமமுக இணைபுக்கு அச்சாரமிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.