டெல்லி விமான நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா ஆகியோர் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழகத்தை சேர்ந்த வாராகி என்பவர் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து, டெல்லி கமிஷனர் அலோக்குமார் வர்மாவுக்கு, எழுதிய மனுவை போலீஸ் சிறப்பு கமிஷனர் ஹசனிடம் நேற்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவராகவும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகவும் நான் இருக்கிறேன். கடந்த ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில்எம்பிக்கள் திருச்சி சிவா, சசிகலா புஷ்பா ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் திருச்சி சிவாவை, அவரது கன்னத்தில் அறைந்ததாக சசிகலா புஷ்பா ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். சசிகலா புஷ்பா தன்னை கன்னத்தில் அறைந்ததை திருச்சி சிவாவும் ஒப்புக் கொண்டு ஊடகங்களில் பேட்டி அளித்தார். மக்கள் பிரதிநிதிகளான இருவரும் பொது இடத்தில் இழிவான முறையில் நடந்து கொண்ட சம்பவம், விமான நிலைய பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் அச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் புகார் பதிவு செய்யவில்லை. விமான நிலையங்களில் இதுபோல அநாகரிகமாக நடந்து கொள்ளும் நபர்களைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதும், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் பாதுகாப்புப் படையினரின் கடமை.
ஆனால், உயர் பாதுகாப்பு மிகுந்த விமான நிலையத்தில் இரு எம்.பி.க்கள் வரம்பு மீறி மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் பதிவு செய்யப்படாதது பல்வேறு சந்தேகத்தை எழுப்புகிறது.
எனவே, எம்பிக்கள் 2 பேர், மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா விடியோ காட்சியை ஆய்வு செய்து, 2 பேர் இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல் துறை அதிகாரி கூறுகையில், "வாராகி மனுவின் நகல் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் விமான நிலைய பொறுப்பு அதிகாரிக்கு டெல்லி காவல் துறை அனுப்பியுள்ளது. அவரது மனுவில் குறிப்பிடப்பட்ட நாளில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விடியோ பதிவு ஏதேனும் இருந்தால், அதை காவல் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அதன் பிறகே வாராகியின் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
