அதிமுகவின் ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள் என எம்.பி.சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா பொதுச்செயலாளராகவும், ஒ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

பின்னர், ஒ.பி.எஸ் வகித்து வந்த முதலமைச்சரின் பதவி மேல் சசிகலாவிற்கு ஆசை வரவே அதை கைப்பற்றுவதற்கான செயல்களில் சசிகலா ஈடுபட்டார்.

தொடர்ந்து ஒ.பி.எஸ்சை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்தும் ராஜினாமா செய்யவும் வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதற்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் பெரும்பாலான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் சசிகலா அணியிலேயே நீடித்து வந்தனர்.

சசிகலாவுக்கு எதிராக பலமுறை போர்க்கொடி தூக்கி வந்த எம்.பி சசிகலா புஷ்பா ஒ.பி.எஸ்க்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

மேலும் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் துணிச்சல் வரும் பொருட்டு எழுச்சி உரைகள் ஆற்றினார்.

இதைதொடர்ந்து சசிகலா புஷ்பா எண்ணப்படி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு சென்றார். அவரை தொடர்ந்து துணைப் பொதுச்செயலாலராக நியமிக்கப்பட்ட டி.டி.வி தினகரனும் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

தற்போது அதிமுக ஒ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என வலம் வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் ஒ.பி.எஸ் அணியும் இ.பி.எஸ் அணியும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள் என எம்.பி.சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று மதியம் சசிகலா புஷ்பா எம்.பி. மதுரை விமான நிலையத்துககு வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களும் எதுவும் செய்வதில்லை.ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்தோ, தினகரன் குறித்தோ பேசவில்லை.அ.தி. மு.க.வின் இரு அணிகளும் மக்களை கோமாளி ஆக்குகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.