முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். முன்னதாக அவர், கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது, அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள், தனியார் அமைப்புகள், சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு சென்றனர்.

அதேபோல், அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் அனைவரும் தமிழகம்  முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் பல்வேறு வேண்டுதல்களை செய்தனர்.

இதற்கிடையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்பி சசிகலா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என கூறிவந்தார்.

மேலும், பல்வேறு முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனைக்கு சென்றபோதும் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை. இதனால், அவரை புகைப்படத்தை, வீடியோவை வெளியிட வேண்டும் என கூறினார். இந்நிலையில், கடந்த மாதம் ஜெயலலிதா காலமானார்.

இதைதொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் உள்ளது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சசிகலா புஷ்பாவின், மனுவை தள்ளுபடி செய்தார்.