அதிமுக துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரனை போலீசார் கைது செய்துள்ளதை அடுத்து, இளவரசி மகன் விவேக்கை துணை பொது செயலாளர் ஆக்க சசிகலா முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதிகளின் மகன் விவேக். ஜெயராமன் இறந்ததை அடுத்து, இளவரசியுடன் போயஸ் கார்டனிலேயே வளர்ந்தவர்.

சசிகலா குடும்பம் கூண்டோடு கட்சியை விட்டு நீக்கப்பட்ட போதும், விவேக் போயஸ் கார்டனிலேயே, இளவரசியுடன் வசித்து வந்தார்.

அரசியல் விஷயங்களில் அவர் பெரிய அளவில் தலை இடுவதில்லை. ஆனாலும், ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் போன்ற நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பை விவேக்கிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா சிறை சென்றதை அடுத்து, பெங்களூரிலேயே தங்கி, தினமும் சசிகலாவை சந்தித்து பேசுவதும், அவர் கூறுவதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதுமாக இருந்து வருகிறார் விவேக்.

தினகரன் மீது அன்பு கொண்டவர் என்பதால், தமது அண்ணன் மகனாக இருந்தாலும், திவாகரன் மற்றும் அவரது மகனுக்கு விவேக்கை பிடிக்காது. அதன் காரணமாகவே, திவாகரன் மகன் ஜெய் ஆனந்துக்கும், விவேக்குக்கும் இடையே முகநூல் மோதல் எல்லாம் நடைபெற்றது.

இந்நிலையில், தினகரன் இல்லாத குறையை போக்கும் வகையில், விவேக்கை அதிமுகவின் துணை பொது செயலாளராக்க சசிகலா தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உண்மையில், சசிகலா குடும்பம் அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என பன்னீர்செல்வம் சந்தேகம் கிளப்பி வரும் நிலையில், விவேக்கை பொது செயலாளராக்க சசிகலா முயற்சிக்கும் விஷயத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, கட்சியும், ஆட்சியும் கையை விட்டு போகாமல் இருக்க வேண்டும் என, சசிகலா எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு எதிராகவே திரும்பிக்கொண்டு இருக்கிறது.

சசிகலா குடும்பத்தை சேர்ந்த யார் அரசியலுக்கு வந்தாலும், அவர்கள் மீது மத்திய அரசின் நடவடிக்கை பாயும் நிலையில், விவேக்கை அரசியலுக்கு கொண்டு வந்து, அவரையும் உள்ளே அனுப்ப வேண்டுமா? என்றும் சிலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.