தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள அனுமதி… பசும்பொன் பயணமாகும் சசிகலா…
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் சசிகலா கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் சசிகலா கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் 114வது ஜெயந்தி விழாவும், 59வது குருபூஜை விழாவும் வரும் 30ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக தலைவர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
விழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டு இருந்தது. ஆகையால் அவருக்கு தேவர் பூஜையில் பங்கேற்ற அனுமதி கிடைக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.
இந் நிலையில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அவர் மதுரை வருகிறார். மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அவர் தங்க உள்ளார்.
பின்னர் கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு வரும் 29ம் தேதி காலை 7.15 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு தெப்பக்குளம் சாலையில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு காலை 8 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அனைத்தும் முடிந்தபின்னர், பசும்பொன் பயணம் மேற்கொள்கிறார். அங்கு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் காலை 10.30 மணி அளவில் மரியாதை செலுத்த இருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பூஜைக்காக கிட்டத்தட்ட 8500 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. 148 இடங்கள் பதற்றமானவை என்று அடையாளம் காட்டப்பட்டு உள்ளது.
மொத்தம் 39 சோதனை சாவடிகளில் பசும் பொன் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படும். 200 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அவற்றை படம்பிடிக்க 80 கையடக்க கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
8 இடங்களில் தண்ணீர் பீரங்கி வாகனங்கள், 16 இடங்களில் ஆம்புலன்ஸ்கள், 18 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. அனைத்து பகுதிகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அசம்பவாத சம்பவங்கள் நிகழாமல், அமைதியான முறையில் தேவர் குருபூஜை நடக்கும் வகையில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். உரிய அனுமதி இல்லாத யாருக்கும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.