sasikala paid homage to jayalalitha

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சசிகலா பின்னர் கதறி அழுதுள்ளார்.

ஜெயலலிதாவுடன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தவர் சசிகலா. உற்ற தோழி, உடன் பிறவா சகோதரி என அறியப்பட்ட சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்தான் நேற்று ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாள் வந்தது. அப்போது அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என சசிகலா விரும்பியுள்ளார்.

இது தொடர்பாக விவேக்கிடம் தொடர்பு கொண்ட சசிகலா தனது விருப்பத்தை தெரிவித்தார். வழக்கறிஞர்களும் இது குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் ரத்த சொந்தம் உள்ளவர்கள் இறந்தால் மட்டுமே பரோலில் போக முடியும் என்பதால் கண்டிப்பாக அனுமதி கிடைக்காது என்பதே சசிகலாவுக்கு பதிலாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவதால் பாதிக்கப்பட்டபோது பரோலில் வெளிவந்தார். தற்போது மீண்டும் பரோல் கிடைக்காது என்று வழக்கறிஞர்களுள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் , சரி, சமாதிக்குத் தான் போக முடியலை அக்காவோட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவாவது ஏற்பாடு செய்யுங்கள் என சசிகலா கூறியுள்ளார்.

இதன்பிறகுதான் அஞ்சலி செலுத்துற்கான ஏற்பாடுகள் மளமளவென செய்யப்பட்டன. தொடர்ந்து சிறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து அனுமதி வாங்கப்பட்டது.

கண்ணாடி பிரேம் இல்லாமல், லேமினேஷன் செய்யப்பட்ட படத்தை மட்டும் உள்ளே கொண்டு வர அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பெங்களூரு புகழேந்தி மூலமாக ஜெயலலிதாவின் படம் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் படத்துக்கு ஏற்ற சைசில் மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். ஜெயலலிதா படத்தையும் மாலையையும் உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.

நேற்று அதிகாலையிலேயே எழுந்த சசிகலா காலை 6 மணிக்கெல்லாம் குளித்துவிட்டுத் தயாரானவர், ஜெயலலிதா படத்துக்கு மாலையைப் போட்டு அதற்கு முன்பாக கண்களை மூடியபடியே அமர்ந்து கொண்டாராம்.

சரியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கண்களைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார் சசிகலா. அதன் பிறகு, அந்தப் படத்தைப் பார்த்து கதறி அழுதபடியே இருந்திருக்கிறார்.

சசிகலா சிறைக்குள் இருந்தாலும், எந்த தகவலை வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் விவேக்கிற்கு சொல்ல, சில அதிகாரிகள் உதவியாக இருக்கிறார்கள். அப்படித்தான் விவேக்கிற்கு நேற்று ஒரு அசைண்மென்ட் தரப்பட்டுள்ளது.

எதாவது ஆசிரமத்துக்குப் போய் இன்றைக்கு அவங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு வரச் சொல்லி நான் சொன்னதாக விவேக்கிட்ட சொல்லுங்க...’ என்பதுதான் அந்த தகவல்.

அதன்படிதான் விவேக்கும், அவரது மனைவி கீர்த்தனாவும் தாம்பரம் அருகே உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று மதியம், இரவு உணவு வழங்கியிருக்கின்றனர்.

அக்கா இறந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என்பதை நம்பவே முடியலை. எனக்கு என்னவோ அவங்க என் கூடவே இருக்கிற மாதிரிதான் இருக்கு... ‘ என்று சிறைக்குள் திரும்பத் திரும்ப புலம்பியபடியே இருந்திருக்கிறார் சசிகலா.