சிறையில் சசிகலா சொல்லும் செய்தியை, வெளியில் வந்து கட்சிக்காரர்களுக்கும், உறவுகளுக்கும் சொல்லுவது, உறவுகள் சொல்வதை சசிகலாவுக்கு சொல்வது என பிசியாக இருப்பவர் இளவரசியின் மகன் விவேக்.

ஆனால், நேற்று முன் தினம், தினகரன் குடும்பத்திற்கு அவர் கொண்டு வந்த செய்தி ரொம்பவும் வித்யாசமான செய்தியாக இருந்தது.

அத்தை சசிகலா, சொன்னதாக அவர் சொன்ன விஷயங்களால், தினகரன் மனைவி அனுராதா உள்ளிட்ட, அங்கிருந்த மற்ற உறவுகளும் ஆடிப்போய் விட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும், அத்தை கட்சியை தமது கட்டுப்பாட்டில் சிறப்பாகத்தான் வைத்திருந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, சொத்து குவிப்பு வழக்கில், அவர்கள் சிறை செல்ல நேர்ந்து விட்டது.

ஆனாலும், அத்தை இல்லாவிட்டாலும், கட்சியை நன்றாக கவனித்து கொள்வார் என்று நம்பித்தான், தினகரனை துணை பொது செயலாளராக நியமித்து விட்டு சென்றார்கள்.

அத்தை சொன்னதை மட்டும், அவர் கேட்டு நடந்திருந்தால், இப்படி ஒரு சிக்கல் வந்திருக்காது. அவர் இஷ்டத்திற்கு, முடிவெடுத்து அனைத்தையும் செய்ததால், இன்றைக்கு அவர் சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அதனால், அத்தை உடலாலும், மனதாலும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால், அவர் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார், அதை கண்டிப்பாக நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

நம் குடும்பத்தை சேர்ந்த யாரும், இனி கட்சியிலும், ஆட்சியிலும் யாரையும் அதிகாரம் செய்ய கூடாது. எது தேவை என்றாலும், அத்தையிடம் கேளுங்கள். அவர் அதை செய்து தருவார்.

அமைச்சர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ யாரும் போன் பண்ணி உத்தரவு போட கூடாது. நம் குடும்பத்தை சேர்ந்த யாரும் அரசியலில் இல்லை என்று மக்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு நம் மீது உள்ள கோபம் தீரும்.

இப்போதைக்கு, கட்சியின் இரு அணிகளும் ஒன்றாக சேர்ந்தாக வேண்டும். அதற்காக, தினகரனை, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்குவதற்கு அத்தை தயாராக இருக்கிறார். அதற்காக உறவுகள் யாரும் கொந்தளிக்க கூடாது.

மேலும், ஜெயா டி.வி நிர்வாகத்திலும் தலையிட கூடாது. அதேபோல், நம் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் ஜெயா டி.வி யில் ஆதரவு தெரிவித்து செய்திகள் வெளியிட கூடாது. ஜெயலலிதா வழியிலான ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

அப்போதுதான், 4 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வரும்போது மக்களுக்கு, தன் மீது அனுதாபம் வரும் என்று அத்தை நினைக்கிறார் என்று, ஒரு வரி கூட விடாமல் ஒப்பித்து இருக்கிறார் விவேக்.

அதனால், என்ன செய்வது என்று தெரியாமல், அந்த இடமே நிசப்தமாகி இருக்கிறது. ஆனால், 4 வருடங்கள் அப்படியே, விட்டுவிட்டால், பிறகு எப்படி நாம் உள்ளே நுழைய முடியும்? என்று டாக்டர் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு, இவ்வளவு யோசிக்கும் அத்தை, அதை யோசிக்காமலா இருப்பார்? என்று விவேக் சொல்ல, அவரும் அமைதியாகி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.