சசிகலா தரப்பினர் சீராய்வு மனு போடுவதால் பலனில்லை. நான்குவருடமும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என ஓய்வு நீதிபதி கற்பக விநாயகம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியும்பதிலும்:
நெறியாளர் : இப்போதிருக்கும் நிலையில் எல்லோருக்கும் உள்ள பொதுவான சந்தேகம் சசிகலா தரப்பினர் தீர்ப்பில் இருந்து தப்பிக்க சீராய்வு மனு மூலம் தீர்வு காணமுடியுமா ?
நீதிபதி(ஓ) கற்பக விநாயகம் : ரெண்டு விஷயங்கள் சீராய்வு மனு என்பது அப்பீல் மாதிரி அல்ல. சீராய்வு மனு போட்டால் கூட இதே தீர்ப்பளித்த ஜட்ஜ் முன்பு தான் விசாரணைக்கு வரும் .
அவர்களின் தீர்ப்பை அவர்களிடமே தப்புன்னு சீராய்வு மனு தாக்கல் மூலம் சொல்ல முடியுமா? அதில் எதை தப்புன்னு சொல்ல முடியுமா? சீராய்வு மனு தீர்ப்பில் இந்த இடத்தில் இப்படி தவறு என்று தான் காட்ட முடியும் ஆகவே சீராய்வு மனு பலனில்லை.
குற்றம் நடந்துள்ளது என்பதை தீர்க்கமாக தீர்ப்பில் குறித்துள்ளனர். 570 பக்க தீர்ப்பில் குன்ஹா அளித்த தீர்ப்பை அழகாக தீர்க்கமாக குறித்துள்ளனர். ஒரு இடத்தில் கூட தவறு காண்பிக்க முடியாது. அனைத்து அம்சங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளனர்.
கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் என்னென்ன தவறுகள் உள்ளது என்பதை தெளிவாக சுட்டிகாட்டியுள்ளனர். ஆகவே சீராய்வு மனுவால் பலனில்லை. அதில் வருமானம் 8.1% என காட்டியுள்ளதை தவறு என்று கூறியுள்ளனர்.
நெறியாளர்: ஜெயலலிதா தண்டிக்கப்படவில்லை என்பதை வைத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா?
நீதிபதி (ஓ) கற்பக விநாயகம் : அப்படி வாய்ப்பே இல்லை. எந்த இடத்திலும் ஒரு சிறு தவறு கூட காண்பிக்க முடியவில்லை. சரியான தீர்ப்பு , சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் பெரிய அளவில் வாய்ப்பில்லை. ஏற்கப்படலாம் விசாரணை செய்யப்படலாம்.
வெளிப்படையான பிழை (apparent error ) நிருபிக்க வேண்டும். நிருபித்தால் வாய்ப்பு உண்டு , ஆனால் இந்த தீர்ப்பில் அதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு நீதிபதி கற்பக விநாயகம் கூறினார்.
இதன் மூலம் நான்கு ஆண்டுகளும் சிறையில் வாடவேண்டும் . வெளியே வர வாய்ப்பே இல்லை. இது தவிர 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் . அதை கட்டாவிட்டால் கூடுதலாக ஓராண்டு தண்டனை உண்டு.
