மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின் அதிமுக தலைமைக்கு யார் வருவது. கட்சியையும் ஆட்சியையும் யார் வழி நடத்துவது எனபது பலத்த சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. கட்சி நிர்வாகிகள் ஒட்டு மொத்தமாக சசிகலாவை பொதுச்செயலாளராக்கியே தீருவோம் என்று வரிந்து கட்டி வருகின்றனர்.
ஆட்சியில் யார் இருப்பது எனபாதை டெல்லி மேலிடம் தீர்மானித்த அடிப்படையில் ஓபிஎஸ் அமர்த்தப்பட்டுள்ளார். இதை தற்காலிகம் என ஒரு குரூப்பும் , இல்லை இல்லை அவர்தான் நிரந்தரம் என ஒரு குரூப்பும் மார் தட்டுகின்றன.

மேலுக்கு சசிகலாவுக்கு ஆதரவு எனபது போல் ஊடகங்களில் பிம்பங்கள் பெரிதாக்கி காட்டப்பட்டாலும் உண்மை வேறுவிதமாக உள்ளதாக சொல்கிறார்கள். கூட்டம் , தீர்மானம் , பொதுமக்களை சந்திப்பது அனைத்துமே கச்சிதமான ஏற்பாட்டுடன் நடப்பதாக கூறுகின்றனர்.
கட்சியில் ஒதுக்கப்பட்டவர்கள் ஓரங்கட்டப்பட்டவர்கள் இதில் மிகவும் பயனடைவதாக சர்ச்சையும் எழுந்துள்ளது. இதை சாக்காக வைத்து சசிகலாவை எப்படியும் நெருங்கிவிட வேண்டும் என நினைப்பபவர்கள் தான் ஜெயலலிதாவை தாண்டி ஆஹா ஓஹோ என்று புகழ்வதை பார்க்கிறோம்.

சைதை துரை சாமி , கோகுல இந்திரா, வளர்மதி, ராஜன் செல்லப்பா, என பலரும் வரிசை கட்டி நிற்கின்றனர். இதில் ஜெயலலிதா பேரவை சார்பில் ராக்கெட் வேகத்தில் தீர்மானங்கள் போடப்படுகிறது, மத்திய அரசை கண்டிக்கின்றனர், எல்லாவற்றையும் தாண்டி முதல்வராகவே சசிகலா பதவி ஏற்கவேண்டும் என்று தீர்மானம் போடும் நிலைக்கு சென்றனர்.
இவைகள் மேலோட்டமாக சசிகலாவுக்கு ஆதரவாக தோன்றினாலும் இந்த முயற்சிகள் வளர்ச்சியை கட்சிக்குள் ஒரு குழு விரும்பவில்லை. நாம் ஏற்கனவே எழுதியுள்ளது போல் சசிகலா சார்ந்த சமுதாயம் மட்டுமே கட்சி அல்ல , மற்ற சமூகத்தினரும் அடங்கியது தான் அதிமுக என்ற இயக்கம் என்பதை ஒட்டி பிரச்சனைகள் எழுந்து வருகிறது. நாடார் சமூகம், வன்னியர் சமூகம், கொங்கு மற்றும் தலித் தலைவர்கள் தோள் தட்டி கிளம்புகின்றனர்.
அனைவரையும் அரவணைக்கும் சக்தியாக ஜெயலலிதா இருந்தார். அவர் எது செய்தாலும் ஜெயலலிதா தான் அனைத்துமாக இருந்ததால் அனைவரும் அடங்கி இருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்கின்றனர்.
மேலும் வெளியிலிருந்து இயக்கப்படும் சக்திகளுக்கும் கட்சியில் உள்ளவர்கள் இசைவு தெரிவித்ததால் அதுவும் கட்சிக்குள் எதிரொலிக்கிறது. ஓபிஎஸ் மேலுக்கு சசிகலா ஆஅதராவு போல் தோற்றமளித்தாலும் அவர் சார்ந்தவர்களும் வேலையை துவக்கி உள்ளனர். இதனால் வரும் காலங்கள் அதிமுகவுக்கு சோதனைகாலங்களாக அமையும்.

அது கட்சியை மட்டுமல்ல ஆட்சிக்கும் குந்தகம் விளைவிக்கும் அளவுக்கு செல்லலாம். அல்லது மற்றவர்களை சரிகட்டியது போல் அவர்களையும் சரி கட்டினால் தற்போது நிலைமை சீராகும். அனைத்து சமூகத்தினருக்குமான விகிதாச்சாரப்படி அதிகாரம் பிரித்தளிக்கப்படவேண்டும் என்பதில் தான் அதிமுகவுக்கு பிரச்சனையே ஆரம்பமாகும்.

மத்தியில் உள்ள பாஜக அரசை சமாதானாப்படுத்தும் முயற்சிகளும் வைகோ போன்றவர்கள் மூலம் நடத்தப்பட்டுத்தான் வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட தலைவர்களில் ஒருவரான பிஎச்.பாண்டியன் , மனோஜ் பாண்டியன், வடக்கு மாவட்ட வன்னியர் சமூகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமி போன்றோர் தற்போது ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் பகீரங்கமாக வெளிப்படலாம் என்றும் அவர்களுக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்தையும் கடந்து சோதனைகளை வென்று சசிகலா வெல்வாரா? கட்சியில் தனக்கான இடத்தை தக்கவைப்பாரா? காலமும் சூழ்நிலையும் தீர்மானிக்கும்.
