தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் நிலைமை சூடுபிடித்து, மாறிக்கொண்டு இருக்கும் நிலையில், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வந்து பெரும்பான்மையை நிரூபிக்கிறேன் என்று கூறி ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறி இருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவை, அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூடி, சட்டசபைத் தலைவராக தேர்வு செய்துள்ளனர். அதே சமயம், சசிகலாவை பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் முன் மொழிந்த, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கி, தனது தலைமையில் ஒரு அணியாக உருவாக்கி செயல்படுகிறார். இரு பிரிவினரும் தனித்தனியாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்துள்ளதால், அடுத்து யார் ஆட்சி அமையும்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த முதல்வர் பன்னீர் செல்வம் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க 5 நாட்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பன்னீர் செல்வம் சந்தித்துவிட்டு சென்றபின், ஏறக்குறைய 2½ மணி நேரம் கழித்து, சசிகலாவும், மூத்த அமைச்சர்களும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

அப்போது, சசிகலா, தன்னுடன் இருக்கும் 129 எம்.எல்.ஏ.க்களின் கையொப்பம் இட்ட ஆதரவு கடிதத்தை கொடுத்துள்ளார்.ஆனால், கடிதம் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் இன்னும் ஆளுநர் ஆட்சி அமைக்க சசிகலாவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்கவில்லை.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னை சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்துள்ளனர் என்பதற்கான ஆதரவு கடிதத்தை உங்களிடம் நான் கடந்த 5ந் தேதியும், 7-ந் தேதியும் சந்தித்து அளித்தேன். மேலும், கடந்த 9-ந் தேதி எங்கள் கட்சியின் மூத்த அமைச்சர்களுடன், நான் வந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து உங்களிடம் அளித்து, என்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தங்களிடம் கோரிக்கை விடுத்தேன். எம்.எல்.ஏ.க்களின் கடிதம், தீர்மானம் ஆகியவற்றின் நகலையும் உங்களிடம் அளித்தேன்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை உங்களிடம் அளித்து 7 நாட்கள் முடிந்து விட்டது, அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டு வீட்டீர்கள். ஆதலால், இப்போதுள்ள அவசர சூழலை கருத்தில் கொண்டு, உங்களைச் சந்திக்க எனக்கு இன்று அனுமதி அளிக்க வேண்டும். என்னுடன் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வந்து, உங்களைச் சந்திக்க அனுமதி அளிக்கக் கோருகிறேன்.

நாட்டின் அரசமைப்பு சட்டத்தின் இறையான்மையையும், ஜனநாயகத்தையும், மாநிலத்தின் நலனையும் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.