அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் பலரும் சசிகலாவுக்கு, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்க, பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் இதுவரை அவர் அவசரம் காட்டவில்லை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த முதல்வர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6ம் தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவி தற்போது காலியாக இருக்கிறது.

ஜெயலலிதாவுக்குப் பிறகு, அந்த பொறுப்புக்கு மிக சரியானவர் என்று அதிமுகவின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவை வழி மொழிகிறார்கள். ஆனால், அவர் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், வரும் 29ம் தேதி அதிமுக பொதுக் குழு நடக்க உள்ளது. அதில், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து பேசி தீர்மானம் நிறைவேற்றுவார்கள் என தெரிகிறது.

அதிமுக மூத்த நிர்வாகிகள் முதல் அடிப்படை உறுப்பினர்கள் வரை, சசிகலாவே அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வலியுறுத்தினாலும், இதுவரை சசிகலா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

சசிகலாவின் முடிவு என்ன? என்பதற்கான ஒரு சின்ன துருப்பும் கிடைக்கவில்லை. அவரும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அனைவரது குரலையும் அவர் தொடர்ந்து கேட்டு வருகிறார். அதிமுக நிர்வாகிகளின் கருத்துக்கள் அவரிடம் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது சசிகலாவின் கருத்துக்காக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், அதிமுகவில் இருந்து கடந்தத சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா, இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருக்கலாம் என்றும், அதன்பிறகு முடிவு செய்யலாம் என்றும் சசிகலா தரப்பினர் காத்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.