கட்சியின் தலைவராக இருந்த சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக பல்வேறு இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. அந்த வகையில் கல்லக்குடியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா தொடர்பாக அவதூறாக பேசிவரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அரும்பாக்கத்தில் உதயநிதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டார். 

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கட்சியின் தலைவராக இருந்த சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர்.ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.  உதயநிதிக்கு எதிராக முதல்வரும், துணை முதல்வரும் ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லவில்லை என தெரிவித்தார். 

சசிகலா வெளியே வந்தாலும் ஒன்றும் நடக்காது என அதிமுக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் கோகுல இந்திராவில் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.