இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை டெல்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. ஓபிஎஸ் -இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து டி.டி.வி.தினகரன் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ்- ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதை எதிர்து உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தி அமமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா நீக்கப்பட்டு டி.டி.வி.தினகரன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்குத் தொடுக்கும் வகையில் அவர் விலக்கி வைக்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் தரப்பு அறிவித்தது. 

இந்நிலையில், டி.டி.வி.தினகரன் சசிகலாவை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதாக பேச்சு எழுந்தது. அதனை மறுத்து வந்தார் டி.டி.வி.தினகரன். இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் நேற்று சந்தித்து வந்தார். மறுநாளே சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.